மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நிகழ்வினை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றினால் ஏற்கனவே திகதி இடப்பட்டதன் அடிப்படையில் இன்று புதன் கிழமை (30)ம் திகதி வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 10 பேரையும் எதிர்வரும் 13.07.2021 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசில் கட்டளை பிறப்பித்துள்ளார்.
கடந்த மே 18 ஆம் திகதி செவ்வாய் கிழமை கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் உட்பட 9 பேரும் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ் வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி ரட்ணவேல் தலைமையில், சட்டத்தரணி கே.சுகாஸ் உட்பட சட்டத்தரணிகளான ரம்சின், ஜெயசிங்கம்,நிரஞ்சன், ரணித்தா, சித்திக் ஆகியோர்கள் ஆஜராகியிருந்தனர்.
இவ் வழக்கு தொடர்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்-
‘இன்றைய தினம் சந்தேக நபர்கள் சார்பில் சமர்ப்பணமொன்றை மேற்கொள்வதற்கான அனுமதியொன்றை நீதிமன்றில் கோரியிருந்ததாகவும், எதிர்வரும் 13ம் திகதி அதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகவும், அன்றைய தினம் சந்தேக நபர்களின் சார்பில் சமர்ப்பணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்த சமர்ப்பணத்திற்கு நீதிமன்றம் வழங்கும் கட்டளையைப் பொறுத்து அடுத்த கட்டமாக நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இலங்கையின் உயர் நீதி மன்றத்திலே மூத்த சட்டத்தரணி ரட்ணவேல் தலைமையில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவித்தார்.