வட கொரியாவில் கடும் உணவு பஞ்சம் நிலவுவதால் 1 கிலோ வாழைப்பழம் 3,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வட கொரியாவில் கிம் ஜங் யுன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி, அணு ஆயுத தயாரிப்பில் வட கொரியா ஈடுபட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் பல நாடுகளில் இருந்து உதவிகளும், பொருட்களும் கிடைப்பது நின்றன.
வடகொரியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக மோசமாக உள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தன் எல்லையை வட கொரியா மூடியது. இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வட கொரியா கூறி வருகிறது. எல்லைகளை மூடியதால் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொருட்கள் வருவது நின்றன. முக்கியமாக உணவு, உரம், எரிபொருள் உள்ளிட்டவை வருவது நின்றன.
இந்நிலையில், கடந்தாண்டு வடகொரியாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இவையனைத்தும் சேர்ந்து, தற்போது வட கொரியாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு 1 கிலோ வாழைப்பழம் 3,336 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிளாக் டீ ஒரு பாக்கெட் 5,167 ரூபாய்க்கும்; காபி 7,381 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
இவ்வாறு பல உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, அத்துடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக உரம் தயாரிக்க ஒவ்வொரு விவசாயியும் தினமும் 2 லிட்டர் சிறுநீர் அளிக்கும் படி, அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1990களில் சோவியத் யூனியன் சிதறுண்டபோது, வட கொரியாவுக்கு தேவையான பொருட்கள் வினியோகம் தடைபட்டது. அதனால், அப்போது கடும் பஞ்சத்தை வட கொரியா சந்தித்தது இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது அது போன்ற கடுமையான பஞ்சத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.