25.4 C
Jaffna
January 19, 2022
உலகம்

பணிப்பெண்ணை பட்டினியிட்டு கொன்ற தமிழ் பெண் காயத்திரிக்கு 30 வருட சிறை!

மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரை பட்டினி போட்டு, கொடுமைப்படுத்தி கொலை செய்த 41 வயதான காயத்திரி முருகையனுக்கு இன்று (22) சிங்கப்பூர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

காயத்திரிக்கு தீர்ப்பு விதித்தபோது பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி சீ கீ ஊன், “குற்றஞ்சாட்டப்பட்டவரின் மிக மோசமான செயலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது,” என்றார்.

நோக்கமில்லா மரணம் விளைவித்த ஆக மோசமான சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று கூறிய நீதிபதி, பணிப்பெண் உயிரிழப்பதற்கு முன்பு நீண்டநாள்களாக கடுமையான தீங்கிற்கு அவர் ஆளானதைச் சுட்டிக் காட்டினார்.

அந்த மியன்மார் பணிப்பெண்ணுக்கு முன்னதாக நான்கு பணிப்பெண்களை காயத்திரி பணியமர்த்தி இருந்ததைச் சுட்டிய நீதிபதி, அவருக்கு எதிராக அந்தப் பணிப்பெண்கள் புகார் எதுவும் எழுப்பவில்லை என்றும் அப்போது காயத்திரி வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தம் மீது சுமத்தப்பட்டிருந்த 28 குற்றச்சாட்டுகளை கடந்த பெப்ரவரியில் காயத்திரி ஒப்புக்கொண்டார். அவற்றில், வேண்டுமென்றே மரணம் விளைவித்தது ஆகக் கடுமையான குற்றச்சாட்டாகும். அதற்காக அதிகபட்ச தண்டனையாக காயத்திரிக்கு ஆயுள் தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டனர்.

காயத்திரியால் கொடுமைக்கு ஆளான பியாங் இங்கை டோன் எனும் பெயர் கொண்ட அந்த 24 வயது பணிப்பெண், 2016 ஜூலை 26ஆம் திகதி உயிரிழந்தார். அப்போது அவரது எடை வெறும் 24 கிலோ கிராம் மட்டுமே.

காயத்திரிக்கு தண்டனை விதிப்பதில் மேலும் 87 குற்றச்சாட்டுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.

காயத்திரியின் தற்காப்பு சட்டத்தரணியான ஜோசஃப் சென், அவருக்கு எட்டு முதல் ஒன்பது ஆண்டு தண்டனையை விதிக்குமாறு வாதிட்டார்.

தமது கட்சிக்காரர், மகப்பேறுக்குப் பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட தாயாராக இருந்ததாக குறிப்பிட்டார். தமது பிள்ளைகளின் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க காயத்திரி தடுமாறியதாகவும் கூறினார்.

அந்தப் பணிப்பெண் சுகாதாரத்தை முறையாக கடைப்பிடிக்காததாலேயே தமது பிள்ளைகளுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக காயத்திரி கருதினார்.

காயத்திரிக்கு ஒன்பது வயது, ஆறு வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது பிள்ளையைக் கருவில் சுமந்திருந்தபோது காயத்திரிக்கு கடுமையான மனநலப் பிரச்சினை இருந்ததாகக் கண்டறியப்பட்டது.

“பொதுவாக பணிப்பெண்ணைத் துன்புறுத்தாதவர் காயத்திரி. பல்வேறு விஷயங்கள் ஒன்றுசேர்ந்து அவரை மனவுளைச்சலுக்கு ஆளாக்கியதால் பணிப்பெண்ணைத் துன்புறுத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். எனினும், பணிப்பெண்ணைத் துன்புறுத்தாத பழைய நிலைக்கு அவர் திரும்பிவிட்டார்,” என்று சென் விவரித்தார்.

தாம் புரிந்த செயலுக்காகவும் பணிப்பெண் உதவி கோர முடியாதது குறித்தும் தமது கட்சிக்காரர் வருந்துவதாகவும் கூறினார்.

காயத்திரியின் பிள்ளைகள் சமூகத்தில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், செய்திகளில் காயத்திரியின் பெயர் குறிப்பிடப்படுவதைத் தவிர்க்க நீதிமன்ற உத்தரவையும் சட்டத்தரணி நாடினார்.

எனினும், “குற்றம் புரிவதற்கு மனநலப் பிரச்சினை ஓர் இலவச அனுமதி கிடையாது” என்று அரசாங்க தரப்பு  வாதிட்டது.

காயத்திரிக்கு மனநலப் பிரச்சினை இருந்ததாலேயே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கொலைக் குற்றச்சாட்டிலிருந்து குறைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

2015 மே 28ஆம் திகதி காயத்திரி குடும்பத்தில் பணிப்பெண் பியாங் பணியமர்த்தப்பட்டார். அப்பணிப்பெண் மீதான துன்புறுத்தல் மாதக்கணக்கில் நீடித்தது.

காயத்திரியும் போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய அவரது கணவர் கெவின் செல்வமும் பீஷானில் உள்ள அவர்களது வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கருவியில், பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட காட்சிகள் பதிவாகின.

கடந்த ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி அந்தத் தம்பதி மணமுறிவு செய்துகொண்டனர்.

பணிப்பெண் மீது காயத்திரி குளிர்ந்த நீரை ஊற்றியது, அவரை அறைந்தது, தள்ளிவிட்டது, குத்தியது, உதைத்தது, ஏறி மிதித்தது போன்ற காட்சிகள் கண்காணிப்புக் கருவியில் பதிவாகின.

பொருட்களைக் கொண்டு பணிப்பெண்ணைத் தாக்குவது, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தது, அவரைப் பலவந்தமாக குலுக்கியது, சூடான இஸ்திரியால் அவரைக் காயப்படுத்தியது போன்ற காட்சிகளும் பதிவாகின.

தண்ணீரில் ஊறவைக்கப்பட்ட ரொட்டித் துண்டு, குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்த குளிர்ந்த உணவு அல்லது சாதம் உள்ளிட்டவை அந்தப் பணிப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவில் அடங்கும்.

காயத்திரியும், தாயாரும்

அந்தப் பணிப்பெண் உயிருடன் இருந்த கடைசி 12 நாள்களில், சன்னல் கம்பியில் கட்டிவைக்கப்பட்டவாறு இரவில் தரையில் படுத்து உறங்கினார்.

2016 ஓகஸ்ட் 8ஆம் திகதி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட செல்வம் (42) அந்தப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதன் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

காயத்திரியின் தாயார் பிரேமா எஸ்.நாராயணசாமி (62) கடந்த 2016ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டார். அவரும் அதே பீஷான் வீட்டில் வசித்தார்.

அவர்களது வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Related posts

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: ஸ்டீபன் லோஃபன் பிரதமர் பதவி ராஜினாமா

divya divya

ஐரோப்பா, மத்திய ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Pagetamil

ரஷ்யாவில் கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு: வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 6வது இடம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!