தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையிலான சந்திப்பு நாளை (16) மாலை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், தமிழர் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்பாக கூட்டமைப்பின் பிரமுகர்கள் த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை தனித்தனியாக கோட்டாபய சந்தித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பின்னர், கூட்டமைப்பை இதுவரை சந்தித்து பேசியதில்லை.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பரிந்துரைகளை வழங்கியிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அனுப்பியிருந்தது. அத்துடன், அரசியல் தீர்வு விடயம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த வேண்டுமென இரா.சம்பந்தன் பகிரங்கமாக கோரியுமிருந்தார்.
இந்த பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடக்குமென தமிழ்பக்கம் அறிந்தது.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.