ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசை ஜாம்பவான்கள் வந்து தமிழக மக்களைத் தங்கள் இசையால் ஆட்சி செய்து வந்துள்ளனர். எம்.எஸ் விசுவநாதன், இளையராஜா, ஏஆர் ரஹ்மான், தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என வரிசையாக தலைமுறைகளுக்கு ஏற்ப பல இசையமைப்பாளர்கள் தோன்றி தமிழ் சினிமாவின் இசையை துளிரச் செய்து வருகின்றனர்.
அப்படி தற்போதைய தலைமுறையின் மிக முக்கிய இசையமைப்பாளராக இருந்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மருமகனான ஜிவி தன்னுடைய சிறு வயது முதலே இசையோடு தன்னை இணைத்துக் கொண்டார்.ஜென்டில் மென் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலின் மூலம் தன்னுடைய சிறுவயதிலேயே பாடகராக அறிமுகமானார். பின்னர் சிறுவனாக இருக்கும் போதே சில பாடல்கள் பாடினார்.
2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி பிரகாஷ். முதல் ஆல்பத்திலே ரசிகர்களைத் தன் இசையின் மூலம் மயங்கினார் ஜிவி. வெயிலோடு விளையாடி, உருகுதே பாடல்கள் தற்போதும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது.
அதையடுத்து ஓரம் போ, அஜித்தின் கிரீடம் படங்களுக்கு இசையமைத்தார். அடுத்து வெற்றிமாறன்- தனுஷ் காம்போ முதன்முறையாக இணைந்த பொல்லாதவன் படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்தார் ஜிவி.
2008-ம் ஆண்டு குசேலன் படத்தின் மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஜிவி. அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்திற்கு ஜிவி இசையமைக்கும் வாய்ப்பு பெற்றதற்கு அவரின் இசையே காரணம். பின்னர் சில படங்களுக்குப் பிறகு சேவல் என்னும் ஹிட் ஆல்பம் கொடுத்தார்.
வெயில் படத்தை அடுத்து அங்காடித்தெரு படத்தில் ஜீவிக்கு வாய்ப்பளித்தார் வசந்தபாலன். அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். அந்தப் படம் ஜிவியின் இமேஜை ஒரு படி மேலே ஏற்றியது.
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு முதலில் யுவன் தான் இசையமைத்து வந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகவே ஜிவியை படத்தில் இணைத்தார் செல்வராகவன். யுவன் இசையில் பாடலின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. எனவே தற்போது காட்சிக்கு ஏற்றவாறு இசையமைக்க வேண்டும் என்னும் சவால் அவருக்கு முன் இருந்தது. அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காண்பித்தார் ஜிவி. அப்படி உருவான பாடல் தான் உன்மேல ஆசை தான். ஆயிரத்தில் ஒருவன் படம் தற்போது ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருவதற்கு ஜிவியின் இசை முக்கியக் காரணம்.
அதையடுத்து ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராஸபட்டினம் என்ற சுதந்திர கால காதல் காவியத்திற்கு இசையமைத்தார் ஜிவி. அவரின் மிகச்சிறந்த ஆல்பங்களில் மதராசபட்டினம் முதலிடத்தில் வைக்கலாம். அந்தளவிற்கு அந்தப் படத்தில் இசையால் அனைவரையும் உருகச் செய்தார் ஜிவி.
வசந்தபாலன், ஏஎல் விஜய், வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட இயக்குனர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகியிருந்தார் ஜிவி.ஆடுகளம், தெய்வத் திருமகள், மயக்கம் என்ன, தாண்டவம், பரதேசி என பல ஆல்பங்களில் ஜொலித்தார் ஜிவி. 2013-ல் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தின் மூலம் முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார். கொம்பன், காக்காமுட்டை, திரிஷா இல்லைனா நயன்தாரா சில ஆல்பங்கள். 2015-ம் விஜய் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து தெறி என்னும் சூப்பர் ஹிட் ஆல்பம் கொடுத்தார்.
இதற்கிடையில் டார்லிங் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி வெற்றியும் பெற்றார் ஜிவி. தெறி படத்தை அடுத்து ஜிவி தான் நடித்த படங்களுக்கே பெரும்பாலும் இசையமைத்து வந்தார். அந்தப் படங்களின் ஆல்பங்கள் அந்தளவிற்கு அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.
பின்னர் 2019-ம் ஆண்டு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு இசையமைத்தார். அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். வா அசுரா வா பாடலில் வெறித்தனம் செய்திருந்தார். அந்தப் படத்திற்காக ஜிவியைப் பாராட்டாதவர்களே இருக்கமுடியாது. அசுரன் வெற்றியைத் தொடர்ந்து சூரரைப் போற்று என மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் ஆல்பம். கையிலே ஆகாசம் படத்தில் ரசிகர்களை அழ வைத்துவிட்டார். கடைசியாக தலைவி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜிவி நடிகராகவும் வெற்றி பெற கடினமாக உழைத்து வருகிறார். இருப்பினும் ஜிவி இசையில் மட்டுமே கவனம் செலுத்தி பல ஹிட் ஆல்பங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் விருப்பமாக இருக்கிறது.
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.