ஆர்யாவின் ‘மகாமுனி’ திரைப்படம் தொடர்ந்து விருதுகளை குவித்து சாதனை படைத்து வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
‘மௌனகுரு’ என்ற வித்தியாசமான திரைப்படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தவர் இயக்குனர் சாந்தகுமார். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதைத்தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமாருக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்தன. பின்னர் ஒரு அழுத்தமான கதைக்களத்தோடு அவர் இயக்கிய திரைப்படம்தான் ‘மகாமுனி’.
ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தில் நடிகர் ஆர்யா மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இந்துஜா, மாஸ்டர் ஜாசிக், மஹிமா நம்பியார், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ரோகிணி, பாலாசிங், அருள்தாஸ், காளி வெங்கட், தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் பல விருதுகளை குவித்து சாதனை படைத்து வருகிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் சாந்தகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த படம் 9 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. மேலும் இரண்டு விருதுகள் இறுதியாகிவிட்டது. ஒன்று சிறந்த வெளிநாட்டு மொழி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு 2 விருது போட்டியில் தேர்வாகியுள்ளது. சர்வதேச விருதுகள் குவித்து வரும் ‘மகாமுனி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.