ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தொடர்பாக தனுஷ் வருத்தத்துடன் போட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே ஜகமே தந்திரம் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தனுஷ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்திருக்கும், இல்லை இல்லை மிரட்டியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜகமே தந்திரம் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகவிருக்கிறது.
ரிலீஸ் தொடர்பாக கோபத்தில் இருந்த தனுஷ், அந்த படத்தை சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்யாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டு தனுஷ் கூறியிருப்பதாவது,
சிறப்பான தியேட்டர் அனுபவமாக இருக்க வேண்டிய படம் நெட்ஃப்ளிக்ஸில் வரப் போகிறது. இருப்பினும் ஜகமே தந்திரம் மற்றும் சுருளியை பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
தனுஷின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், அழுவது போன்ற எமோஜியை வெளியிட்டு அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள். நீங்கள் மட்டும் இல்லை நாங்களும் சுருளியை தியேட்டரில் பார்த்து கொண்டாட ஆசையாக இருந்தோம். ஆனால் இப்படி செய்துவிட்டார்கள்.
ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். செம கேங்ஸ்டர் படமாக இருக்கும் போன்று. உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை கார்த்திக் அண்ணா. ரஜினிக்கு எப்படி பேட்ட மாஸாக அமைந்ததோ, அதே போன்று அவரின் மருமகன் தனுஷுக்கு ஜகமே தந்திரம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள்.
ஜகமே தந்திரம் படத்தை தனுஷ் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அது ஓடிடியில் வெளியாவது அவரை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது. இதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். படப்பிடிப்பை அடுத்த ஆண்டு துவங்க திட்டமிட்டுள்ளனர்.