பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ன் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் பிரபல தனியார் யூடியூப் சேனல் அளித்த விருதை திருப்பிக் கொடுத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை சர்ச்சைகளுக்கு பஞ்சாமில்லாமல் கொண்டு சென்றதில் இவருக்கு முக்கிய பங்குள்ளது. இந்நிலையில் பிரபல தனியார் யூடியூப் சேனல் பாலாஜி முருகதாஸுக்கு அளித்த விருதை அவர் திருப்பிக் கொடுத்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித், சுசித்ரா, ரேகா, சோம் சேகர் உள்ளிட்ட 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர்.
இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவருடனும் சண்டை போட்டு சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் பாலாஜி. ஒரு எபிசோடில், சக போட்டியாளர் சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்ற சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து கூறினார்கள்.
சர்ச்சைகள் பலவற்றில் சிக்கினாலும் பிக்பாஸ் சீசன் நான்கில் இரண்டாம் இடத்தை பெற்று ரன்னர் அப் பாக ஆனார் பாலாஜி முருகதாஸ். ஆரி முதல் இடத்தை பிடித்து டைட்டில் வின்னர் ஆனார். இந்நிலையில் பிரபல தனியார் யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுக்கு Biggest Sensation on Reality Television விருது கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டது. இதனிடையில் அண்மையில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அதில் பாலாஜி பேசிய 2 நிமிட வீடியோ ‘கட்’ செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த நிகழ்ச்சி வீடியோவை பார்த்து மிகவும் அப்செட் ஆனா பாலாஜி முருகதாஸ், அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஏன் நான் பேசிய அந்த 2 நிமிட வீடியோவை கட் செய்தீர்கள், என் விருதை திருப்பித் தருகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக தொடங்கியதை அடுத்து, ரசிகர்கள் பலரும் பாலாஜி முருகதாஸ் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.