சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கி ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. நீண்ட இடைவெளிக்கு கடந்த 2019ம் ஆண்டு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
நான்கு கோணங்களில் நான்கு கதையம்சங்களை வைத்து நான்கு கதைகளும் எவ்வாறு கிளைமேக்ஸ்சை அடைகிறது என்பதை வித்தியாசமாக எடுத்து இருந்தார் இயக்குனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்திற்கு இயக்குனர்கள் நலன் குமாரசாமி, நீலன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் வசனம் எழுதியிருந்தனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது அனைவரின் பாராட்டை பெற்றது.
இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த படத்தின் கதையை எழுதிவிட்டதாகவும், இது சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.