அனைவரும் கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அனேகன் பட நடிகை அமிரா தஸ்தூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2015ம் ஆண்டு மறைந்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்தூர். கடந்த 5 வருடங்களாக தமிழில் எந்த திரைப்படமும் நடிக்காமல் இருந்த அவர், பிரபுதேவா பல கெட்டப்புகளில் நடித்து வெளிவரவிருக்கும் ‘பஹிரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார்.
இதற்கிடையே கொரானாவின் இரண்டாவது அலையால் இந்தியாவே நிலை குலைந்து உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நடிகை அமிரா தஸ்தூர், தனது முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.