உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகளவில் முதல்முறையாக இங்கிலாந்து நாட்டில்தான் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கடந்த டிசம்பர் மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியபோது வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற 81 வயது நபர் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இந்நிலையில், அவர் தற்போது உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வில்லியம் ஷேக்ஸ்பியர் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக கோவெண்ட்ரி பல்கலைக்கழக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டபோது இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் 30 ஆண்டுகளாக பேரிஷ் கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். அதில் பேரிஷ் கவுன்சிலின் தலைவராக 20 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மேலும், அல்லெஸ்லி நீதிமன்ற பள்ளிகளில் கவர்னராக பதவி வகித்துள்ளார்.