கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தந்தையை சரியாக கவனிக்காமல் கொன்று விட்டார்கள் என்று நர்ஸுகள் மீது புகார் தெரிவித்துள்ளார் நடிகை சம்பாவ்னா சேத்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தந்தையை நர்ஸுகள் கொன்றுவிட்டதாக சம்பாவ்னா சேத் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சம்பாவ்னா சேத். போஜ்புரி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் தந்தை எஸ்.கே. சேத்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு டெல்லியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள். இந்நிலையில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். தன் தந்தை இறந்ததற்கு நர்ஸுகளின் கவனக்குறைவே காரணம் என்கிறார் சம்பாவ்னா சேத்.
தன் தந்தையை சரியாக கவனிக்காமல் கொலை செய்துவிட்டார்கள் என்று சம்பாவ்னா சேத் புகார் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், என் தந்தையின் ஆக்சிஜன் அளவு சரியாகத் தான் இருக்கிறது என்று தவறாக சொன்ன அந்த நர்ஸின் பெயர் என்னவென்றுஅடிக்கடி கேட்டுள்ளார். மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
தன் தந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி சம்பாவ்னா வீடியோ வெளியிட்ட இரண்டு மணிநேரத்தில் அவரின் தந்தை இறந்துவிட்டார். வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளத்தில் சம்பாவ்னா கூறியிருப்பதாவது, அவர்கள் என் தந்தையை கொன்றுவிட்டனர். அனைத்து டாக்டர்களும் கடவுளுக்கு சமமானவர்கள் இல்லை. சிலர் வெள்ளை நிற கோட் அணிந்து நம் அன்புக்குரியவர்களை கொலை செய்கிறார்கள் என்றார்.
நான் இந்த வீடியோவை எடுத்த இரண்டு மணிநேரத்தில் என் தந்தை இறந்துவிட்டார். இல்லை அவரை கொன்றுவிட்டார்கள் என்று சொல்வதா?. என் அப்பாவை இழந்துவிடுவோமோ என்பது தான் என் வாழ்க்கையின் மிகப் பெரிய பயமே. ஆனால் தற்போது பயமில்லாமல் போராடப் போகிறேன். இந்த போராட்டத்தில் நான் ஜெயிக்கலாம், ஜெயிக்காமல் போகலாம். ஆனால் அவர்களின் முகத்திரையை கிழிக்கப் போகிறேன். இந்த போராட்டத்தில் உங்களின் ஆதரவு தேவை. இது போன்ற நேரத்தில் பலரும் மருத்துவமனைக்கு சென்று இப்படிப்பட்ட சூழலை சந்தித்திருந்தாலும் போராட முடியாமல் இருப்பீர்கள். #justice4sambhavna #medicalmurder ஆகிய ஹேஷ்டேகுகளுடன் இந்த வீடியோவை ஷேர் செய்து நாம் எல்லாம் சேர்ந்து போராடலாம் என்கிறார் சம்பாவ்னா சேத்.