ரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “ இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்துள்ளதைக் கேள்விப்பட்டேன். பாலஸ்தீனிய பிரதேசங்கள் துன்பம் மற்றும் ரத்தத்தால் துடிக்கின்றன. நீங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். நீங்கள்தான் இதனை என்னை சொல்ல வற்புறுத்தி உள்ளீர்கள். நாங்கள் இனி அமைதியாக இருக்கப் போவதில்லை. ரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.
முன்னதாக இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார்.
இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.