27.5 C
Jaffna
August 7, 2022
சினிமா விமர்சனம்

சக மக்களை வெறுக்க முடியுமா?- ஆஸ்கர் வென்ற ஜோஜோ ராபிட் படம் தரும் தெளிவு!

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதை, இனவெறி என்று உலக நாடுகள் விமர்சித்துவருகின்றன. சில பத்தாண்டுகளாகவே இந்தத் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், கடந்த நூற்றாண்டின் முதற்பாதியில் நடைபெற்றது முற்றிலும் வேறு.

இன்றைக்குப் பாலஸ்தீனத்தைத் தாக்குவதை முழு மனதுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் அதே யூத மக்களை ஒட்டுமொத்தமாக உலகை விட்டே துடைத்தெறிய முயன்றார் ஜெர்மனி அதிபர் ஹிட்லர். ஜெர்மனியிலும் அது கைப்பற்றும் நாடுகளிலும் வாழ்ந்த யூத மக்கள் கத்தியின் விளிம்பிலேயே வாழ்ந்து கொண்டிருந்தனர். ஹிட்லரின் உத்தரவுக்கேற்ப குண்டு மழைகளாலும், நச்சு வாயுக்களாலும் யூத மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஹிட்லர் நிகழ்த்திய கொடுமைகளை ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் Schindler’s List, The Pianist போன்ற பல படங்கள் பதிவு செய்திருக்கின்றன. ஆனால், எப்படி அத்தனை லட்சம் யூதர்கள் கொல்லப்படுவதை, மற்றொரு பகுதி மக்களை ஒருவரால் ஏற்றுக்கொள்ள வைக்க முடிந்தது. பெருமளவு ஜெர்மானியர்கள், ஜெர்மானிய ராணுவம் எப்படி இதை ஏற்றுக்கொண்டது என்பதை அறிந்துகொள்ள பின்வரும் படம் உதவும்.

2019இல் வெளியான டைகா வெய்டிடி இயக்கிய ‘ஜோஜோ ராபிட்’ தான் அந்தப் படம். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம் இது. எப்படிப் பிஞ்சுகள் முதல் முதிர்ந்த மூளைகள் வரை யூத இன வெறுப்பு சார்ந்து மூளைச்சலவை செய்யப்பட்டன என்பதை அலட்டலும் ஆரவாரமும் அற்ற திரைமொழியில் கூறியிருக்கிறது. ரத்தமும் சதையுமாய் யூத இன அழிப்பைப் பல படங்கள் காட்டியிருந்த நிலையில், இந்த அம்சத்தில் மக்களின் மனதை மாற்றிய, நம்பவைத்ததன் பங்கை ஜோஜோ ராபிட் மூலம் இயக்குநர் கூறியிருக்கிறார்.

சிறுவனான ஜோஜோதான் கதாநாயகன். அம்மா ரோஸி பெட்ஸ்லருடன் போர்க்களம் சென்ற அப்பாவுக்காகக் காத்திருப்பவன். நாஸி மூளையோடும், மனிதநேய இதயத்தோடும் வளர்க்கப்படும் குழந்தை. கதை முழுவதும் அவனோடு நிழல் மனிதன் ஒருவன் உலவுகிறான். அவனைப் பொறுத்தமட்டில் அந்த நிழலே ஹிட்லர். அந்த நிழல் போதிப்பதே வேதவாக்கு. அவன் பள்ளியில் சொல்லப்பட்டவை, அந்த சமூகச் சூழல் கற்பித்த யூத இன வெறுப்பு, குருட்டு தேசியவாதம், ஹிட்லர் மாயை என மழலையைத் தொலைத்த குழந்தை அவன்.

can-hate-fellow-people

எப்படியாவது ராணுவத்தில் இணைந்து யூதர்களுக்கு எதிராகப் போரிடத் துடிக்கிறான். அதைச் செய்ய முடியாமல் போகும் வகையில், ஒரு விபத்தில் காயமுற்று வீட்டுக்குள் முடங்குகிறான். தன்னால் முடிந்த சேவையாற்ற நாஸிக்களுக்கான கீழ்நிலை வேலைகளை செய்கிறான். நாட்கள் நகர, தன் தாயால் வீட்டுக்குள் ஒளித்து வைத்திருக்கப்படும் யூதப் பெண்ணான எல்சாவைக் கண்டு ஒருநாள் பதறுகிறான். அவளைக் கொல்லவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் துடிக்கிறான். தினமும் அவளோடு உரையாடுகிறான். அவளைப் பற்றி சொல்லச் சொல்லிக் கேட்கிறான். அவள் சொல்லத் தொடங்கும் போதெல்லாம், இவன் மூளையில் புதைக்கப்பட்ட யூதர்கள் குறித்தான மோசமான சிந்தனையை ஒவ்வொன்றாக உதிர்க்கிறான்.

குழந்தை மனம் அல்லவா? போதிக்கப்பட்டதை மட்டுமே நம்பிய அவனுக்கு எல்சாவின் அன்பும், யூதர்களைப் பற்றிய உண்மையும், அவர்களும் எல்லா மனிதர்களையும் போன்றவர்களே என்பது புரியும்போது இனம்புரியாத குழப்ப உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் மகனை நாஸி மாயையிலிருந்து மீட்டு மனிதனாக மாற்ற முயலும் ஒரு ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தாயின் பாசப் போராட்டமாகப் படம் நீள்கிறது. பல நாட்கள் ஊருக்கு மத்தியில் தூக்கிலிடப்படும் யூதர்களை, அவர்களுக்கு உதவியவர்களை சட்டைசெய்யாத ஜோஜோ, ஒரு நாள் அதே தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் தன் தாயின் கால்களைக் கட்டித்தழுவிக் கதறுகிறான். அப்போது அங்கே குறியீடுகளாய் வைக்கப்பட்டிருக்கும் கண்கள் உள்ள வீடுகளை இவன் கண்கள் சபிப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

தன் தாயின் இறப்பிற்குக் காரணம் எல்சாதான் என அவளைக் கொல்லச் செல்கிறான். ஆனால், குழந்தையான அவனால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் இருவரும் பிரிவின் தனிமையில் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி இளைப்பாறுகிறார்கள். போர் இறுதிக் கட்டத்தை அடைகிறது. உணவில்லை, தண்ணீர் இல்லை. வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல். ஜெர்மானிய கடைசிக்கட்டப் போர்ச் சூழலைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இறுதியில் யார் வென்றார்கள், யார் விடுதலை பெற்றார்கள், ஜோஜோவைக் கவ்விய இனவாதம் வென்றதா, ரோஸியும் எல்சாவும் போதிக்க முயன்ற மனிதநேயம் வென்றதா என்பதே கதையின் முடிவு.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா பறக்கும் ரஜினி!

divya divya

கேரளாவில் பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுன் கைது

divya divya

ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ: இணையத்தை கலக்கும் ப்ரியா பவானி சங்கரின் புகைப்படம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!