அரேபிய கடலில் ஒரு கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்க கடற்படை இன்று அறிவித்தது. இது ஏமனில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போரில் போராளிக் குழுக்களுக்காக கொண்டு செல்லப்பட்டது எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை எதிர்ப்பு கப்பல் யுஎஸ்எஸ் மான்டேரி, அரேபிய கடலின் வடக்கு எல்லைகளில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஒரு நடவடிக்கையில், சந்தேகத்திற்குரிய கப்பல் ஒன்றைக் கைப்பற்றி சோதனை செய்ததில் இந்த ஆயுதக் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் சீன தயாரிப்புகள், கலாஷ்னிகோவ் பாணியிலான தாக்குதல் துப்பாக்கிகள், கனரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.
கப்பல் எங்கிருந்து செல்கிறது என்று கடற்படை இன்னும் அடையாளம் காணவில்லை. இந்த கப்பலில் எந்த நாட்டு கொடியும் காணப்படவில்லை. மேலும் இது பாரம்பரிய அரேபிய பாணியில் கட்டப்பட்ட கப்பலாகும்.
பின்னர் விசாரணையில் இவை ஏமனுக்குச் செல்வதாக விவரிக்கப்பட்டது, அங்கு ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணியைக் கட்டுப்படுத்துவதற்காக 2015 முதல் போராடி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக மோதல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏமன் துறைமுகங்களில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் போராளிகளுக்கான ஆயுதங்கள் துறைமுகங்கள் மூலம் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.