லூதியானா: சாக்ஸ் விற்கும் சிறுவனின் நேர்மையை பாராட்டி பஞ்சாப் மாநில முதலமைச்சர் அச்சிறுவனின் கல்வி செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் நெரிசல் மிக்க சாலைகளில் சிக்னல்களில் வாகனங்கள் நிற்கும் போது, ஓட்டுநர்களிடம் சாக்ஸ் விற்கும் சிறுவன் வன்ஷ் சிங். 10 வயதில் குடும்ப சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை 2ம் வகுப்புடன் நிறுத்திவிட்டான்.
அன்றும் வழக்கம் போல் சாக்ஸ் விற்கும் போது, சிலர் அதற்குண்டான பணத்துடன் அதிகமாக பணம் கொடுத்துள்ளனர். அதை வாங்க வன்ஷ் சிங் மறுத்துள்ளான். அத்துடன், சாக்ஸ் வாங்காமலேயே சிலர் பணம் கொடுத்துள்ளனர். அதையும் சிறுவன் வாங்கவில்லை. சிக்னலில் நின்ற ஒருவர் அவனிடம் சாக்ஸ் வாங்குவது போல் பேச்சு கொடுத்து பள்ளி படிப்பு போன்ற விவரங்களை கேட்டுள்ளார்.
அதற்கு அவன் பதில் சொல்வதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. தற்செயலாக அந்த வீடியோ முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பார்வையிலும் பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் அமரீந்தர் பேசினார். அத்துடன் சிறுவனிடமும் அமரீந்தர் சிங் பேசினார்.
இதுதொடர்பான வீடியோவும் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ட்விட்டர் பதிவில் வெளியானது. அந்த வீடியோவில் முதலமைச்சர் பேசும்போது, ‘உன் குடும்பத்துக்கு நான் உதவி செய்கிறேன். கவலைப்படாதே, உன் குடும்ப செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறேன். நீ பள்ளிக்கு சென்று நன்றாகப் படி. உன்னை பள்ளியில் சேர்க்க மாவட்ட ஆட்சியரிடம் பேசுகிறேன்’ என்று உறுதி அளிக்கிறார். அத்துடன், சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் நிதி அளித்துள்ளார். இந்த வீடியோவும் வைரலானது.
அதை பார்த்த பலர் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளத்தில் ஒருவர் கருத்து வெளியிடுகையில், இதேபோல் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.