மத்தியப்பிரதேசத்தில் கொரோனா நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையின் இரண்டு வார்டு பாய்களை இந்தூர் போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுபம் மற்றும் ஹிருதேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“குற்றம் சாட்டப்பட்ட இருவரும் எம்ஒய் மருத்துவமனையின் நெஞ்சு சிகிச்சை வார்டில் ஒரு கொரோனா நோயாளியை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இந்த சம்பவம் மே 5 மற்றும் மே 6 இடைப்பட்ட இரவில் நடந்தது” என்று இந்தூர் காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் பக்ரி தெரிவித்தார்.
“இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்ப உறுப்பினர்களிடம் புகார் கூறினார். ஆனால் அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். சன்யோகிதகஞ்ச் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளது.” என்று பக்ரி மேலும் கூறினார்.
ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வார்டு பாய்கள் குற்றவியல் பதிவு வைத்திருந்தார்களா இல்லையா என்பதை காவல்துறை இப்போது மருத்துவமனை நிர்வாகத்துடன் சரிபார்க்கிறது என்று எஸ்.பி. பக்ரி மேலும் தெரிவித்தார்.கொரோனா நோயாளியிடம், மருத்துவமனை ஊழியர்களே பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.