புதிய தமிழக அரசை பார்த்து, “இனப்படுகொலை” என கரித்துக்கொட்டி, இனிமேலும், எல்லோரையும் பகையாளி ஆக்கி ஓலமிட நான் தயார் இல்லை. அப்படி ஓலமிடுபவர்களுக்கு என்னிடம் இடமுமில்லை என தெரிவித்துள்ளார் மனோ கணேசன்.
தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு-
நமக்கு, தமிழக-இந்திய திமுக பற்றி தெரியும். அப்படியே அஇஅதிமுக, பிஜேபி, காங்கிரஸ், நாம் தமிழர், பாமக, மதிமுக, விசிக பற்றியும் தெரியும்.
அங்கே மாநில கட்சிகளுக்கு இருக்கின்ற அரசியல் அதிகாரம் பற்றியும் தெரியும்.
இலங்கை முழுக்க செயற்படும் தமிழர், முஸ்லிம் கட்சிகளையும் தெரியும். நமது ராஜ-தந்திர அரசியல்வாதிகளையும் தெரியும்.
2005ல் முதன் முறையாக எப்படி மஹிந்த வென்றார் என்றும் தெரியும். ரணில் எப்படி தோற்றார் என்றும் தெரியும்.
பிறகு, இறுதி யுத்தம் எப்படி நடந்தது என்பதும் தெரியும். அப்பாவி மக்கள், எப்படி கொல்லப்பட்டார்கள் என்றும் தெரியும்.
பிறகு, 2010ல் மஹிந்த எப்படி மீண்டும் வென்றார் என்றும், இறுதி யுத்தம் நடத்திய ராணுவ தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் வேட்பாளரானதும், அவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததும் தெரியும்.
ஆயுத வரலாறு முழுக்க நிகழ்ந்த படுகொலைகளையும், சகோதர படுகொலைகளையும் தெரியும்.
யுத்தம் நடத்திய கட்சி சார்பாக நேரடியாகவே தமிழ் எம்பிக்கள், தேர்தலில் வாக்கு பெற்று, தெரிவாகி, இன்றைய இலங்கையின் 9வது பாராளுமன்றத்தில் என்னுடன் இருப்பதும் தெரியும்.
நான் நேற்று பிறக்கவில்லை. இவற்றையெல்லாம் கடந்துத்தான், இன்றைய வரலாற்று திருப்பத்தில் நிற்கின்றேன்.
இந்நிலையில், இன்று எட்டு கோடி தமிழர்களை ஆள தமிழக மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வரையும், அவரது அரசாங்கத்தையும் எப்படி எமக்காக பயன்படுத்துவது என்றுதான் நான் பார்க்கிறேன். வாழ்த்துகிறேன்.
புதிய தமிழக அரசை பார்த்து, “இனப்படுகொலை” என கரித்துக்கொட்டி, இனிமேலும், எல்லோரையும் பகையாளி ஆக்கி ஓலமிட நான் தயார் இல்லை. அப்படி ஓலமிடுபவர்களுக்கு என்னிடம் இடமுமில்லை.