கன்னட நடிகர் அர்ஜுன் கௌடா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியிருக்கிறார். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லவும் உதவி வருகிறார்.
கொரோனாவின் 2ம் அலையால் இந்திய மக்கள் படும் பாட்டை பார்த்து உலக நாடுகள் அச்சமடைந்துள்ளனர். நோயாளிகள் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பெட் கிடைக்காமல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல், ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் பலர் அல்லாடி வருகின்றனர்.
உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை திரையுலகினர் சிலரும், பொது மக்களும் செய்து வருகிறார்கள். பெட், ஆக்சிஜன் சிலிண்டர், பிளாஸ்மா, மருந்து கேட்பவர்கள் பிரபலங்கள் அல்லது செய்தியாளர்களை டேக் செய்து தான் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இந்நிலையில் பரிதவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கியிருக்கிறார் இளம் கன்னட நடிகர் அர்ஜுன் கௌடா. ப்ராஜெக்ட் ஸ்மைல் டிரஸ்ட் என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளையை துவங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்ளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். கோவிட் 19 பாசிட்டிவ் என்று தெரிய வந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்கிறார்.
மேலும் அவரே ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்க்கிறார். இது தவிர கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்கும் தன் வாகனத்தில் எடுத்துச் செல்கிறார் அர்ஜுன். இது குறித்து அர்ஜுன் கூறியிருப்பதாவது,நான் கடந்த இரண்டு நாட்களாக ஆம்புலன்ஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இறுதிச் சடங்குகளில் இதுவரை 6 பேருக்கு உதவியுள்ளேன். மதம், மொழி இவற்றை எல்லாம் பார்க்காமல் ஆம்புலன்ஸ் தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறேன். பிற நகரங்களுக்கும் சென்று உதவ தயாராக இருக்கிறேன்.

மேலும் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு அதை டெலிவரி செய்யவும் நான் தயார் என்றார். அர்ஜுன் கௌடாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் பெட் கிடைக்காதது மட்டும் பெரிய பிரச்சனை இல்லை, ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இருப்பதும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த நேரத்தில் அர்ஜுன் செய்யும் உதவி மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.