மத்திய அமைச்சர் மானுஷ் மந்தவ்யாவின் மகள் திஷா, கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை பெருமிதத்துடன் மானுஷ் தனது டுவிட்டரில் பகிர, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தந்தைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார் என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
மத்திய யூனியன் ரசாயன மற்றும் உர மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார் மானுஷ் மந்தவ்யா (வயது 48). குஜராத்தை சேர்ந்த இளம் எம்.எல்.ஏ ஆன இவர், எளிமையாக வாழ்ந்து, தொகுதி மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். தனது சிறந்த பேச்சாற்றல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார்.
இவரது மகள் திஷா, டாக்டராக உள்ளார். சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் அவர், தற்போது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். திஷா பிபிஇ கிட், மாஸ்க் உடன் கொரோனா கவச உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மானுஷ்.
களப்பணியில் ஈடுபட்டிருக்கும் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். மேலும், கொரோனா காட்டுத்தீ போல பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், தனது மகளின் பங்களிப்பை தான் எதிர்பார்ப்பதாகவும், இந்திய மக்களுக்கு அவர் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ்களை குவித்துள்ளனர். 4.6 ஆயிரம் பேர் ரீடுவிட் செய்திருக்கின்றனர். தந்தைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே அவர் பெருமை சேர்த்திருப்பதாக நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.