கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக பிரதமர் மோடியிடம் விமானப்படை தலைமை தளபதி பதுாரியா தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதுாரியா சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விமானப்படையின் பங்களிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி பதுாரியா ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக பிரதமரிடம் பதுாரியா தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களையும் சென்றடையும் திறனுடைய பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு அதிகமானோர் தேவைப்படுவர் என்பதால் விமான குழுவினர் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் பதுாரியா தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் டேங்கர்கள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தை பாதுகாப்பாகவும் வேகமாகவும் செய்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை பதுாரியாவிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது