மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுண்டமனி, வடிவேலு ஆகியோருடன் இணைந்து காமெடியில் கலக்கி வந்தவர் நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக். 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தனது படங்களின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில நல்ல கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். இவ்வளவு ஏன், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஏ பி ஜே அப்துல் கலாமின் ஆசைக்கிணங்க ஒரு கோடி மரக்கன்றுகளை கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலமாக தொடங்கினார். கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார். மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுரை கூறி வந்த விவேக் தற்போது இல்லாவிட்டாலும், அவருக்கு பேரும் புகழும் சேரும் வகையில், சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் மரக்கன்றுகள் நட்டு வைத்து வருகின்றனர்.
இயற்கை மீது பற்று கொண்ட விவேக்கை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு சில முடிவுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசனையும் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த ஆலோசனையின் போது விவேக் புகைப்படத்துடன் கூடிய தபால் தலை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவும், வரும் மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு விவேக் தபால் தலை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.எனினும், இது தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.