பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சியாச்சின் செக்டரின் ஹனீப்பில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவுக்குப் பின்னர் மீட்கப்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று இந்திய ராணுவம் இரு வீரர்களின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஏப்ரல் 25 மதியம் 1 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது.
“சியாச்சின் செக்டரின் ஹனீப்பில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். 2021 ஏப்ரல் 25 அன்று மதியம் 1 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இரு வீரர்களையும் மாலை 7.30 மணிக்கு மட்டுமே மீட்க முடிந்தது. இந்த இரண்டு வீரர்களும் காயங்கள் காரணமாக இறந்தனர்.” என இந்திய ராணுவத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மீதமுள்ள அனைத்து வீரர்களும் போர்ட்டர்களும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.” என்று இராணுவம் மேலும் கூறியது.பாகிஸ்தான் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அமைதியைக் கடைபிடிப்பதாக ஒப்பந்தம் மேற்கொண்டு அதை செயல்படுத்தி வருவதால், எல்லையில் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக உயிரிழப்பு நிகழ்வது நின்றுள்ளது.
இந்நிலையில், உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.