ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. முதல் முறையாக சிவா – ரஜினிகாந்த் கூட்டணியில் அண்ணாத்த படப்பிடிப்பு உருவாகி வருவதால், இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த பட த்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜகபதி பாபு, ஜாக்கி ஷெராஃப், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன், பிரகாஷ் ராஜ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்..
ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்தும், ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட தைத் தொடர்ந்தும் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு ரஜினிகாந்த் மீண்டும் தொடங்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத்திற்கு சென்றார். அவருடன் சூரி, நயன்தாரா ஆகியோர் பலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், விறுவிறுப்பாக நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு வரும் மே 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. அதன் பிறகு போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு படம் அறிவித்தபடி வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு வரும் என்று தெரிகிறது. ஆனால், தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பாளர்களின் கவனம் முழுவதும் ஓடிடி பக்கம் திரும்பி வருகிறது. ஆனால், ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு அப்படியொரு நிலைமை வராது என்று கூறப்படுகிறது.