விவசாயிகளிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய விதை வெங்காயத்தை விற்பனை செய்த விவசாய போதனாசிரியர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தின், கனகராயன்குளத்தில் விவசாய போதனாசிரியராக பணியாற்றி, தற்போது புலமைப்பரிசில் திட்டத்தில் வவுனியா இலங்கை விவசாய கல்லூரியில் கல்வி கற்று வந்த உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கனகராயன்குளம் விவசாய போதனாசிரியராக செயற்பட்ட பயிலுனர் உத்தியோகத்தரை, வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளர் புலமைப்பரிசிலில் வவுனியாவிலுள்ள இலங்கை விவசாய கல்லூரியில் கல்வி கற்க அனுமதித்திருந்தார்.
விவசாய போதனாசிரியராக செயற்பட்ட காலத்தில், விவசாயிகளிற்காக இலவசமாக வழங்குவதற்காக அனுப்பப்பட்ட ஒரு தொகை விதை வெங்காயத்தை கிலோ ஒன்றிற்கு 12,000 ரூபா வீதம் விற்பனை செய்ததாக விவசாயிகள் தரப்பிலிருந்து, விவசாய திணைக்கள அதிகாரிகளிற்கு முறையிடப்பட்டிருந்தது.
அத்துடன், சௌபாக்கிய ஊக்குவிப்பு கொடுப்பனவிலும் விவசாயிகளிடம் கொமிசன் வாங்கியதாகவும் விவசாயிகள் தரப்பிலிருந்து எழுத்துமூல முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான ஆதாரங்களை சேகரித்த மாவட்ட அதிகாரிகள், மோசடி தகவல்களை வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளருக்கு அறிவித்ததாக தெரிகிறது. எனினும், பணிப்பாளர் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இதேவேளை, பணிப்பாளருக்கு தகவல் வழங்கப்பட்ட போது, அந்த ஆவணத்தின் பிரதியொன்று வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளர் நடவடிக்கையெதுவும் எடுத்திராத நிலையில், அமைச்சின் செயலாளர் அதிரடியாக செயற்பட்டு, வவுனியா விவசாய கல்லூரியில் கல்வி கற்று வந்த நிலையிலேயே, அவரை சேவையிலிருந்து இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடமாகாண விவசாய திணைக்களத்தில் திறமையான அதிகாரிகள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நீண்டநாள் அடிப்படையில் வடக்கு விவசாய திணக்களம் நெருக்கடியை சந்திக்குமென விமர்சிக்கப்பட்டு வருகிறது. வவுனியா பிரதி விவசாய பணிப்பாளராக செயற்பட்ட சகிலா பானுவின் காலத்தில், அரச விதை பண்ணை இலாபமீட்டி வந்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த பண்ணை நஷ்டத்தில் இயங்குவதாக காண்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த பண்ணையில் இடம்பெற்ற பெரும் மோசடியுடன் தொடர்புடையவர்கள் மீது வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளர் நடவடிக்கையெடுக்கவில்லை, காப்பாற்ற முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், வவுனியாவில் தற்போது இடம்பெற்ற மோசடி தொடர்பிலும் விவசாய அமைச்சின் செயலாளரே நடவடிக்கையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.