இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றையடுத்து, தனது 50 நோயாளர் காவு வண்டிகளையும், மருத்துவ ஊழியர்களையும் இந்திய மக்களுக்கு உதவ நன்கொடை அளிக்க அனுமதி கோரி பாகிஸ்தானியரான பைசல் எடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சியில் நோயாளர் காவு வண்டி சேவையை நடத்தி வருகிறார் பைசல் எடி.
அவர் இந்திய பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்,
“இந்தியாவில் தற்போதைய தொற்றுநோயால் நாங்கள் வருத்தப்படுகிறோம். எங்களுக்கு பணம் அல்லது உணவு அல்லது எரிபொருள் தேவையில்லை. எங்கள் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்குகிறோம். இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள எங்கள் நோயாளர் காவு வண்டிகள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தயாராக உள்ளனர்.
எங்களுக்கு தேவையானது இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மட்டுமே. நீங்கள் எங்கு சொன்னாலும் சேவை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். காவல்துறை அல்லது மருத்துவமனை மட்டுமே அவ்வாறு செய்ய எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும், ”என்று பைசல் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பைசல் எடியின் தந்தை அப்துல் சத்தார் எடி, பாகிஸ்தானின் உதவியற்ற மக்களுக்கு மிகப்பெரிய சேவையைச் செய்வதால் பாகிஸ்தானின் அன்னை தெரசா என அழைக்கப்பட்டவர்.
பைசல் எடி இப்போது தனது தந்தையின் வழியில், பாகிஸ்தானின் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார்.