தன் பெரியப்பா எம். சவுந்திர பாண்டியனின் மறைவால் இதயம் நொறுங்கிவிட்டதாக இயக்குநர் அட்லி சமூக வலைதளங்களில் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆர்யா, நயன்தாரா, ஜெய் உள்ளிட்டோர் நடித்த ராஜா ராணி படம் மூலம் இயக்குநரானவர் அட்லி. அதன் பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் தான் அட்லி வீட்டில் அந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது.
இது குறித்து அட்லி சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,
என் பெரியப்பா எம். சவுந்திர பாண்டியன் காலமாகிவிட்டார். எங்கள் மொத்த குடும்பத்தின் ஆலமரம் அவர் தான். இதயம் நொறுங்கிவிட்டது. இந்த வலியை தாங்க முடியவில்லை. இதில் இருந்து எப்படி மீளப் போகிறேன் என்றே தெரியவில்லை. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். எங்களின் கிங், ரோல் மாடல் நீங்கள் தான் பெரியப்பா. லவ் யூ. உங்களை மிஸ் பண்ணுவோம். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
அட்லியின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்நிலையில் பெரியப்பா பற்றி அட்லியின் மனைவி ப்ரியா மோகன் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
அட்லியின் பெரியப்பா மிஸ்டர் எம். சவுந்திர ராஜன் இறந்துவிட்டார். உங்களை மிஸ் பண்ணுவோம் அங்கிள். என்னை எப்பொழுதுமே உங்களின் சொந்த மகள் போன்று நடத்தினீர்கள். நீங்கள் சொன்னதை எல்லாம் ஒருபோதும் மறக்கவே மாட்டேன். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெரியப்பா எப்படி இறந்தார் என்று ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கொரோனா நேரத்தில் பத்திரமாக இருக்கவும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.