கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நேற்று (24) காலை கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இணைந்து இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டிருந்தது.