அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் முதலில் தொடங்கப்பட்டன.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதியுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான சிவாங்கி, இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.
‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.