ஜெனிவாவில் தமிழர் தரப்பினரால் கூறிய விடயங்களை மெய்ப்பிப்பதாகவே, அரசாங்கம் நியமித்த அரசியல் பழிவாங்கலிற்கான ஆணைக்குழு அமைந்துள்ளது. நீதியின் பயணத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு தவறான வழியில் திசை திருப்புகின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். நீதியானது தனது தூய பாதையில் பயணஞ் செய்ய இலங்கை அரசாங்கம் இடமளிக்கும் என்று எஞ்ஞான்றும் நாம் நம்ப முடியாது என்றோம். இதனால்த்தான் தமிழர்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியன ஒரு சர்வதேச நியாமன்றை உருவாக்குங்கள் என்று கேட்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.
நேற்று நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதிப்பு சார்ந்த பொதுச் சேவைக்குள் அரசியலானது புக இடமளித்த காலம் தொடக்கம் பதவியில் உள்ளோரின் பழிவாங்கல் குணம் பற்றியும் தம்மவர் நலம் பேணும் தன்மை பற்றியும் எதிர்த்தரப்பார் கூறுவதும் அதன்பின் எதிர்த் தரப்பார் பதவிக்கு வந்தவுடன் தம்முடைய ஆதரவாளர்கள் முன்னைய அரசால் பழிவாங்கப்பட்டார்கள் என்று கூறுவதும் சகஜமாகி விட்டது. ஆனால் பின்னர் பதவிக்கு வருபவர்கள் தாங்களும் பொதுச் சேவையில் இருக்கும் தமது ஆதரவாளர்களின் நலன்களைப் பேணும் வண்ணமே நடந்து கொள்வார்கள்.
இவ்வாறான நாசகரமான பழக்கமானது பொதுச் சேவைக்குள் அரசியல் ஊடுறுவியதாலேயே ஏற்பட்டது.
பாராளுமன்றமோ அரசியல்வாதிகளோ பொதுச் சேவையின் செயற்பாடுகளில் தலையிடக் கூடாது. அவ்வாறு செய்வது அரசியல் யாப்பின் 4ம் உறுப்புரையில் காணப்படும் “அதிகாரப் பிரிவினை” என்ற கோட்பாட்டை மீறுவதாக அமையும். நிறைவேற்றுத் துறையின் ஒரு அங்கமே பொதுச் சேவை. எனினும் அத்துறையின் மற்றைய அங்கத்தவர்களான ஜனாதிபதியும் அமைச்சரவையும் பொதுச்சேவை மீது வரையறுக்கப்பட்ட அதிகாரமே கொண்டுள்ளனர்.
எமது அரசியல் யாப்பானது நிறைவேற்றுத் துறை பற்றி மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவையாவன VII, VIII, IX ஆவன. IXவது அத்தியாயமே பொதுச் சேவை பற்றி விவரிக்கின்றது. அமைச்சரவைக்கு பொதுச் சேவை மேல் இருக்கும் ஒரேயொரு அதிகாரமானது கொள்கை பாற்பட்டதே. அரசியல் யாப்பின் உறுப்புரை 55(4) பின்வருமாறு கூறுகின்றது –
“அரசியல் யாப்பின் ஏனைய ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவையானது கொள்கை பாற்பட்ட சகல விடயங்களையும் அவை பற்றிய தீர்மானங்களையும் பொது அலுவலர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும”;.
அரசியல் யாப்பானது காரணத்துடன் தான் ஜனாதிபதியையோ அமைச்சரவையையோ பொதுச் சேவையின் செயற்பாடுகளில் ஊடுறுவ இடமளிக்காது விட்டுள்ளது. அமைச்சரவை கொள்கையளவிலான அறிவுரைகளை வழங்கலாம். உதாரணமாக யார் யாருக்கு எதிராகக் குற்றச்சாட்டுப் பத்திரம் பதிய வேண்டும் என்பதை அமைச்சரவை தீர்மானிக்க முடியாது. அதற்கான உரித்து சட்டத்துறைத் தலைமையதிபதியை மட்டுமே சாரும்.
இதற்காகத் தானோ என்னவோ உயர்மிகு ஜனாதிபதி அவர்கள் வேறு பல நிறுவனங்களை உள்ளேற்றாலும் சட்டத்துறைத் தலைமை அதிபதியை மேற்படி ஆணைக்குழுவுடன் சேர்க்கவில்லை. ஆணைக்குழு தான்தோன்றித்தனமாக வழக்குத் தொடுப்பவர்களையும் வருத்தத் தொடங்கியிருப்பது வியப்பைத் தருகின்றது.
அமைச்சரவையானது தனது நடவடிக்கைகள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கே பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. அமைச்சரவை கொள்கை ரீதியான நெறிப்படுத்தலை மட்டுமே பொதுச் சேவைக்கு அளிக்க முடியும் என்று இருக்கும் போது பாராளுமன்றம் எதனை மேலதிகமாக பொதுச் சேவை சம்பந்தமாகச் செய்ய முடியும்? பாராளுமன்றம் அமைச்சரவையின் கொள்கைகள் பற்றி மட்டுமே கேள்விகள் எழுப்பலாம். ஆனால் பாராளுமன்றம் அரசியல் பழிவாங்கலைக் கட்டுப்படுத்த தகுந்த சட்டங்களை நிறைவேற்ற முடியும்.
ஆனால் பாராளுமன்றம் தனிப்பட்டவர்கள் சம்பந்தமாக பொதுச் சேவையினரை நெறிப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால் அத்தகைய செயல் அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 4 மற்றும் 55 ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமைந்து விடும்.
நான் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது கௌரவ சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க அவர்கள் பல வழக்குகளில் என்முன் தெரிபட்டுள்ளார். அவர் நேற்று, பசில் இராஜபக்ச போன்றவர்களுடன் சேர்ந்த அவரின் கட்சிக்காரர்களுக்கு சென்ற அரசாங்கம் காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றி நடிப்பது போலவும் விலாவாரியாகவும் பலதையும் எடுத்துக் கூறினார்.
ஆனால் தனிப்பட்டவர்களோ அவர்களின் சட்டத்தரணிகளோ சாட்சியங்கள் அவர்களுக்கெதிராகப் புனையப்பட்டுள்ளன என்றோ அல்லது அரசியல் ரீதியாகப் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றோ கண்டால் நீதித்துறையூடாக உரிய நிவாரணங்கள் பெற பல வழிகள் உண்டு. முதலாவதாக அதே வழக்கில் அம்மன்றத்தில் ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். இரண்டாவதாக அரசியல் யாப்பின் உறுப்புரை 126ன் கீழ் தமது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறி உச்ச நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் உறுப்புரை 140ன் படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையாணைகள் எவற்றையேனும் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்ல! குரோத எண்ணமுடன் பொய் வழக்குப் பதியப்பட்டது என்று வழக்குப் பதிந்து நட்ட ஈடு பெற்றுக் கொள்ளலாம்.
நீதித்துறையின் கீழான நியாயாதிக்க எல்லைகள் பரந்து கிடக்கின்றபடியால் அநியாயம் நடப்பதைத் தடை செய்து நட்ட ஈடும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆகவே தனிநபர்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்க நிறைவேற்றுத் துறைக்கோ சட்டவாக்கத் துறைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. தனிநபர்கள் தமது குறைகளைத் தீர்க்க நீதித்துறையையே நாட வேண்டும்.
முன்னைய அரசாங்கம் ஒன்றினால் நடாத்தப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்கு விசேட ஆணைக்குழுக்களையும் குழுக்களையும் நாடலாம் என்று கருதுவது சட்டவாட்சிக் கொள்கைக்கு முரணானது. உறுப்புரை 126ன் கீழ் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமில்லை. அரசியல் யாப்பின் உறுப்புரை 126(1) பின்வருமாறு கூறுகின்றது. “அத்தியாயம் IIIஅல்லது அத்தியாயம் IV ன் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்லது மொழியுரிமை நிறைவேற்றுத் துறையின் நிர்வாக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டால் அல்லது பாதிக்கப்படும் ஆபத்தில் இருந்தால் அவற்றை ஆராய்ந்தறியும் பிரத்தியேகமானதும் தனிப்பட்டதுமான அதிகாரம் உச்ச நீதிமன்றத்தையே சாரும்”.
ஆகவே மேற்படி பொதுச் சேவை அலுவலர்கள், அரசகூட்டுத்தாபன ஊழியர்கள், அரச படையினர் மற்றும் பொலிஸ் சேவையில் இருந்தோர் சம்பந்தமான அரசியல் பழிவாங்கல்களை ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்திற்குப் புறம்பானது என்பதே எனது கருத்து. பொதுச் சேவை தனது கடமைகளைப் பக்கச் சார்பின்றி ஆற்ற இடமளிக்க வேண்டும். அவர்கள் பதவியுள்ளோரின் மனங்களைக் கவர தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல.
நேற்றைய தினம் கௌரவ சரத் ஃபொன்சேகா அவர்களால் பிஸ்சு பூசா ஆணைக்குழு என்று அழைக்கப்பட்ட இந்த ஆணைக்குழு சட்டத்திற்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதெனின் அவ்வாறான ஆணைக்குழு அறிவுள்ளோர் காலடி எடுத்து வைக்க விரும்பாத இடங்களுக்குள் எல்லாம் மகிழ்வுடன் காலடி எடுத்து வைத்துள்ளது.
ஆணைக்குழுவால் ஆராயப்பட்ட பல வழக்குகள் முடிவுறாமல் இன்றும் நடப்பில் இருந்து வருகின்றன. ஆணைக்குழுவானது அரசியல் யாப்பின் உறுப்புரை 105 னால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு அமைப்பல்ல. அதாவது நீதி நிர்வாகத்திற்காகச் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல. ஆகவே நீதித் துறைக்கு ஏற்புடைத்தான விடயங்களுக்கு எதிர்மாறாக இயற்றப்பட்ட ஒருஅமைப்பே அது.
முடிவுறாமல் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் சம்பந்தமாக ஆணைக்குழு எடுக்கும் சகல நடவடிக்கைகளும் நீதித்துறையின் செயற்பாடுகளில் ஊடுறுவல் செய்யும் நடவடிக்கைகளாகவே கருதப்படுவன. அவ்வாறான ஊடுறுவல் அரசியல் யாப்பின் உறுப்புரை IIIC என்பதின் ஏற்பாடுகளுக்கு முரணானவை. அவ்வுறுப்புரையின்படி நீதித்துறையின் நடவடிக்கைகளுள் ஊடுறுவல் செய்யும் விதத்தில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளின் படி ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றச் செயலாகும். இந்த விவாத முடிவில் மேற்படி ஆணைக்குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுத்தால் இந்த உயரிய பாராளுமன்றமும் உறுப்புரை ஐஐஐஊ ன் கீழ் குற்றம் இழைத்ததாகவே கருதப்படும். அதனால்த்தான் போலும் இந்த விவாதம் பற்றிய பிரேரணையில் தவறுகள் இருந்தாலும் விவாதத்தை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படவில்லை.
இதனால்த்தான் இவ்வாணைக்குழுவை உருவாக்கிய 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந் திகதி வெளிவந்த வர்த்தமானி இலக்கம் 2157ஃ44 ல் (இறுதிப் பந்திக்கு முந்திய பந்தியில்) மேற்படி ஆணைக்குழுவால் அதன் குறிக்கோள்கள் சம்பந்தமாக எடுக்கப் போகும் நடவடிக்கைகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கோ எடுக்கப்படப் போகும் நடவடிக்கைகளுக்கோ பாதிப்பில்லாமல் அவற்றிற்கு அப்பால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆவன என்று கூறப்பட்டுள்ளது. “பாதிப்பில்லாமல்” என்று கூறும் போது ஆணைக்குழுவின் புதிய நடவடிக்கைகள் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்க மாட்டா என்று அர்த்தப்படும். அப்படியானால் நீதிமன்றங்களில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்களைப் புறந் தள்ளும் விதத்தில் ஆணைக்குழு செயற்பட்டதன் அர்த்தம் என்ன? ஆணைக்குழு தான் எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் தாற்பரியத்தை அறியாது இருப்பது விந்தையேயாகும்.
இவ்வளவும் கூறிய பின், இன்னொரு கோணத்தில் இருந்தும் இதைப் பார்க்கின்றேன். தற்போது இந்த நாட்டில் நடக்கும் செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கும், சட்டவாட்சிக்கும், பொதுச் சேவையினதும் நீதித்துறையினதும் சுதந்திர செயற்பாடுகளுக்கும் சாவு மணி அடிப்பது போல் இருந்தாலும் மாறி மாறி வந்த ஸ்ரீலங்கா அரசாங்கங்களினால் பாதிப்புற்று இதுவரையில் நீதி பெறாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த ஆணைக்குழுவின் நியமனமும் அதன் செயற்பாடுகளும் அதன் அறிக்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் ஒரு முரணான சிந்திப்பின் அடிப்படையில் வரவேற்கத் தக்கதாகும்.
அதாவது வரவேற்பதன் அர்த்தம் என்னவென்றால் ஜெனிவாவில் தமிழர் சார்பான தரப்பினரால் கூறிய அதே விடயங்கள் இந்த நடவடிக்கைகளால் ருசுப்படுத்தப்பட்டுள்ளன. நீதியின் பயணத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு தவறான வழியில் திசை திருப்புகின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். தமிழர்கள் இதுகாறும் கூறி வந்தனவற்றிற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு உதாரணம் போல் அமைந்துள்ளது. நாம் என்ன கூறினோம்? நீதியானது தனது தூய பாதையில் பயணஞ் செய்ய இலங்கை அரசாங்கம் இடமளிக்கும் என்று எஞ்ஞான்றும் நாம் நம்ப முடியாது என்றோம். இதனால்த்தான் தமிழர்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியன ஒரு சர்வதேச நியாமன்றை உருவாக்குங்கள் என்று கேட்டிருக்கின்றார்கள்.
ஊழல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நபர்கள் மீது விசாரணை நடத்த விடாமல் தடுக்கும் அரசாங்கம் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கும் என்று எவ்வாறு நம்பலாம்? இலங்கைக்கெதிராக செயற்படுகின்றார்கள் என்று எமது புலம்பெயர் உறவுகளையும், அரசசார்பற்ற அமைப்புக்களையும் மேற்குலகையும் கண்டிக்கும் அரச தரப்பில் இருக்கும் நீங்கள் தற்போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
உங்களுடைய கையாட்களையும் அடிவருடிகளையும் காப்பாற்ற நீங்கள் எடுத்திருக்கும் கேள்விக்கிடமான இந்த நடவடிக்கைகள் அல்லவா இலங்கையை அதள பாதாளத்திற்குள் தள்ளுகின்றது?
சிந்தித்துப் பாருங்கள்!
எவராவது ஒருவர் இந்த நாட்டை நாங்கள் மட்டுமே நேசிக்கின்றோம் என்று கூறும் தகுதி பெற்றவர் அல்ல. இந்த நாட்டின் பெரும்பான்மையினர் மனிதாபிமான முறையிலும், புத்திசாதுர்யத்துடனும் மற்றும் தூர நோக்குடனும் நடந்திருந்தால் தற்போதைய இந்த இடர் நிலை இந்த நாட்டைப் பாதித்திருக்காது. எமது இளைஞர்கள் துப்பாக்கிகள் தூக்கியிருக்க மாட்டார்கள். நாங்கள் இனியாவது எமது பாதையை மாற்றி நிதானம் நோக்கியும் ஐக்கியம் நோக்கியும் செழுமை மிக்க எதிர்காலம் நோக்கியும் பயணிப்போமாக