மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். முன்னதாக, சிவராஜ் சிங் சவுகான் இன்று மாநிலத்தில் நிலவும் கொரோனா நிலைமை பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் விவாதித்தார்.
மத்திய அரசு ஒக்சிஜன், ரெம்டிஸ்விர் ஊசி மற்றும் பிற அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் சவுகானிடம் கூறினார். மாநிலத்தில் உள்ள இராணுவ மருத்துவமனைகள் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வருக்கு மோடி உறுதியளித்தார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் இன்று முதல்வரை சந்திக்க உள்ளனர்.
இதற்கிடையில், தொற்றுநோயின் இரண்டாவது அலை மாநிலத்தை கடுமையாக பாதித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் உரையாற்றுவார்.
கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சவுகான் முன்பு கூறியிருந்தார்.
“ஒக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. அதன் வழங்கல் தேவையை விட அதிகமாகும். ரெம்டிஸ்விர் (முக்கிய வைரஸ் தடுப்பு மருந்து) 4,000 ஊசி மருந்துகளை நாங்கள் பெற்றுள்ளோம், மேலும் இன்று 5,000 அதிகமாக கிடைக்கும். அவற்றின் வழங்கல் வழக்கமாக இருக்கும்.” என்று அவர் கூறினார்.