தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (14) புதன் கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் இன்று புதன் கிழமை காலை 7.45 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றது.
பிலவு வருட சிறப்பு பூஜையினை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ கருணாநந்த குருக்கள் நடாத்தி வைத்தார்.சுபவேளையில் விசேட அபிசேகம் நடாத்தப்பட்டடு தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றன.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களும் மருத்து நீர் தேய்த்து வழிபாடுகளை முன்னெடுத்தனர்.
தமிழ்-சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது நாட்டில் நீண்ட சாந்தியும் சமாதானமும் நிலவவும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பிலவு வருட புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டதுடன் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொண்டதோடு, சுகாதார நடைமுறைகளுடன் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.