28.6 C
Jaffna
September 27, 2021
விளையாட்டு

டெல்லி வெற்றி: மாஸ்டரை வீழ்த்திய மாணவன்!

நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கபிடல்ஸ் அணி.

முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய டெல்லி கபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 8 பந்துகள் மீதமிருக்கையில் 190 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வென்றது.

டெல்லி கபிடல்ஸ் அணிக்கு இளம் வீரர் ரிஷப் பந்த் கப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். ஜாம்பவான் தோனியிடம் அவர் கற்ற வித்தைகளை எல்லாம் இறக்குவாரா வெல்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் அனைத்து எதிர்பார்ப்புகளையும் உடைக்கும் விதமாக ‘குருவையே சிஷ்யன் தோற்கடித்துவிட்டார்’. கூர்தீட்டிய மரத்தின் மீதே ரிஷப்பந்த் பதம் பார்த்துவிட்டார். சிஎஸ்கே அடித்த ஸ்கோரை சேஸிங் செய்ய 2 பேர் போதும் என்ற ரீதியில் நேற்று டெல்லி அணி விளையாடிவிட்டது.

பிரித்வி ஷா, தவண்

சிஎஸ்கே அணி வீரர்களின் பந்துவீச்சை உருட்டி, புரட்டி எடுத்த பிரித்வி ஷா, ஷிகர் தவண் இருவரும் அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தனர். இதில் 54 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து (2 சிக்ஸர், 10 பவுண்டரி) ஆட்டமிழந்த ஷிகர் தவணுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பீல்டிங்கில் 3 கட்சுகளையும் தவண் பிடித்தார்.

பிரித்வி ஷா 38 பந்துகளில் 72 ரன்கள் (3 சிக்ஸர், 9பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரின் ஆட்டமே வெற்றிக்கு முக்கியக் காரணமாகும்.

சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 4 சதங்கள் உள்பட 857 ரன்களை குவித்து நாட்டிலேயே அதிகமான ரன்களை குவித்த வீரர் எனும் பெருமையை பிரித்வி ஷா படைத்துள்ளார். அதே ஃபோர்மில் இன்னும் இருக்கிறேன் என்று நேற்று சிஎஸ்கேவை புரட்டி எடுத்துவிட்டார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சொதப்பிய பிரித்வி ஷா, கால்கலை நகர்த்தி ஆடுவதில் சிக்கல் இருந்தது. இதனால் அவுஸ்திரேலியத் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அதன்பின் தன்னுடைய துடுப்பாட்ட குரு சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனை, அறிவுரைகளைப் பெற்று தவறுகளை பிரித்வி ஷா திருத்திக்கொண்டார். இந்த தவறுகளை திருத்தி, பின்னங் கால்களை நகர்த்தி ஆடும் பிரித்வி ஷாவின் ஆட்டம் விஜய் ஹசாரேவில் நல்ல பலன் கொடுத்தது, இந்த ஆட்டத்திலும் அது எதிரொலித்தது.

20 உலகக் கோப்பையில் இடம் பெறுவதற்கு இந்த ஐபிஎல் நல்ல உரைகல் என்பதை மனதில் வைத்து தவண் தாண்டவமாடி விட்டாார். இங்கிலாந்து தொடரிலிருந்து நல்ல ஃபோர்மில் இருந்த தவண், முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவை சின்னாபின்னமாக்கிவிட்டார். கடந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த தவண், இந்த முறை சதத்தை தவறவிட்டார்.

திருப்பம் அளித்த பந்துவீச்சு

டெல்லி அணியின் பந்துவீச்சில் ஆவேஷ் கான், வோக்ஸ் நல்ல திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர், இருவருமே குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து தலா 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் இன்னும் ரபாடா, ஆன்ரிச் நார்ஜே வரவில்லை. இருவரும் இருந்திருந்தால், சிஎஸ்கே நிலைமை கதை கந்தல்தான்

அனுபசாலிகளான அஸ்வின், அமித் மிஸ்ரா இருவரின் பந்துவீச்சும் நேற்று எடுபடவி்ல்லை. அதிலும் அஸ்வினுக்கு நேற்று சேதம் அதிகம். இங்கிலாந்து தொடரிலிருந்து ரன்களை வாரி வழங்கும் வள்ளல் ரொம் கரன், இந்தப் போட்டியிலும் அதைப் பணியைச் செய்தார். அடுத்தப் போட்டியில் ரொம் கரனுக்குப்பதிலாக ரபாடா, நார்ஜே வரக்கூடும்.

மொத்தத்தில் ரிஷப்பந்த் கேப்டன்ஷிப்பில் “டெல்லி கில்லியாக வந்திருக்கிறோம்” என்பதை சொல்லி அடித்துள்ளது.

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை ஐபிஎல் தொடங்கும் முன்பே அணியில் வீரர்கள் தேர்வு சரியில்லை, வேகப்பந்துவீச்சுக்கு நல்ல பந்துவச்சாளர்கள் இல்லை என்பது தொடர்ந்து குறைகூறப்பட்டது நேற்று உறுதியானது.

பல் இல்லாத பந்துவீச்சு

189 ரன்கள் எனும் பெரிய ஸ்கோரை அடித்துவிட்டு அதை டிபஃண்ட் செய்ய முடியாவிட்டால் எதற்கும் லாயக்கில்லாத பந்துவீச்சு என்றுதான் சொல்ல முடியும். பல் இல்லாத பந்துவீச்சாகத்தான் நேற்று இருந்தது. சிஎஸ்கே அணியில் முதல்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற பெயரில் இருக்கும் பிராவோ, சஹர், தாக்கூர் போன்றோர் 130 கி.மீ வேகத்தையே கடக்க முடியாதவர்கள். ஆனால், 150கி.மீ வேகத்துக்கு வீசக்கூடிய தரமான பந்துவீச்சாளர்கள் தேவை. பிரித்வி ஷா, தவண் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சில் ரன்களை சேர்க்க நேற்று சிரமப்பட்டார்களா என்று நேற்று போட்டியை பார்த்த ரசிகர்களுக்கு தெரியும். ஒரு பவுன்ஸர் இல்லை, ஷோர்ட் போல் இல்லை, ஸ்விங் இல்லை, லைன் லென்த் இல்லாமல் ஸ்லாட்டிலேயே வீசி ரன்களை வாரி வழங்கினர்.

தாக்கூர்,சஹர் இருவருக்கும் ஸ்லோ போல், நக்குல் பந்துவீச்சு நன்றாக வரும் என்பதற்காக தொடர்ந்து அதேயே வீசுவதுதான் நல்ல பந்துவீச்சா. மும்பை மைமதானத்தைப்பற்றி நன்கு தெரிந்தபின்பும் சிஎஸ்கே பந்துவீச்சை மாற்றாதது தோல்விக்கு முக்கியக் காரணம்.

ஏறக்குறைய 13 ஓவர்களுக்குப்பின்புதான் முதல்விக்கெட்டை கழற்ற முடிந்தது. இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை அடித்துவிட்டது அதை டிபெஃண்ட் செய்ய வலுவான வந்துவீச்சு அவசியம் தேவை. ஆனால், இதுபோன்ற பந்துவீச்சாளர்கள் மும்பை மைதானத்தில் தேறமாட்டார்கள்.

சிஎஸ்கே அணி கடைசி வரிசையில் பிராவோ வரை பேட்ஸ்மேன்கள் வைத்துள்ளார்கள், மிரட்டப் போகிறார்கள் என்றெல்லாம் ஊதி பெரிதாக்கப்பட்டது. ஆனால், தொடக்கமே நமத்துப்போன பட்டாசாக மாறிவிட்டது.

மும்பை வான்ஹடே ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் எவ்வளவு ஸ்கோர் செய்தாலும், அதை டிபெஃண்ட் செய்து ஆடுவது கடினம், சேஸிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானம். இந்த மைதானத்தில் சிஎஸ்கே அடித்த ஸ்கோர் போதுமானதாக இல்லை. அதிலும் கடைசி நேரத்தில் சாம் கரன், ஜடேஜா அதிரடியாக ஆடாமல் இருந்தால், 160 ரன்களுக்குள்ளாக கதை முடிந்திருக்கும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, நேற்று டக்அவுட் ஆகினார். ஐபிஎல் வரலாற்றில் தோனி 4வது முறையாக டக்அவுட் ஆகியுள்ளார். 2015இல் ஹர்பஜன் பந்துவீச்சிலும், 2010ம் ஆண்டில் திர்க் நானேன்ஸ் பந்துவீச்சிலும், ஷேன் வட்ஸன் பந்துவீச்சிலும் தோனி டக்அவுட் ஆகியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய ஆறுதல் என்பது சுரேஷ் ரெய்னா நீண்ட இடைவெளிக்குப்பின் ஆட வந்து ஃபோர்முக்கு வந்து அரைசதம் அடித்ததுதான் ஆறுதல். மொத்தத்தில் சிஎஸ்கே ரிட்டர்யர்ட் ஆர்மி தான்!

190ரன்கள் எனும் இலக்கை நோக்கி தவண், பிரித்வி ஷா களமிறங்கினர். தீபக் சஹர் வீசிய ஓவரின் 2வது பந்தில் பவுண்டரி அடித்து பிரித்வி தனது கணக்கைத் தொடங்கினார். சாம் கரன் வீசிய 4வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் விளாசி தவண் தனது அதிரடியை ஆரம்பித்தார். இருவரின் காட்டடியால் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி டெல்லி அணி 61 ரன்களைச் சேர்த்தது.

பிரித்விஷா, தவண் இருவரையும் பிரிக்க சிஎஸ்கே கப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பயனில்லை. சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை தவண், ஷா இருவரும் தண்ணி குடிக்கவைத்தனர். இதில் சான்ட்னர் ஒரு கட்சை கோட்டைவி்ட்டதும் கூல் கப்டன் தோனி, ஹொட்டானார்.

10.1 ஓவர்களில் வி்க்கெட் இழப்பின்றி டெல்லி அணி 100 ரன்களை எட்டியது. ஐபிஎல் வரலாற்றிலேயே விக்கெட் இழப்பின்றி, 100 ரன்களை எட்டும் 4வது அணி டெல்லி கபிடல்ஸ் என்பது கவனிக்கத்தக்கது.
பிரித்வி ஷா (7வது ஐபிஎல் அரைசதம்) 27 பந்துகளிலும், தவண் 35 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

பிராவோ வீசிய 14வது ஓவரில் இரக்கப்பட்டு பிரித்விஷா விக்கெட்டை மொயின் அலியிடம் கட்ச் கொடுத்ததுபோன்று இருந்தது. பிரித்வி ஷா 72 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 138 ரன்கள் சேர்த்தனர். அடுதது கப்டன் ரிஷப்பந்த் களமிறங்கினார்.

அதிரடியாக ஆடிய தவண் 85 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். தவண், பிரித்வி இருவருமே முக்கால் வெற்றியை உறுதி செய்துவிட்டதால் ரிஷப்பந்த்திற்கு பெரிதளவு வேலையில்லை. அதிலும் ஸ்டாய்னிஸ் களமிறங்கி அதிரடியாக 14 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப்பந்த் 15 ரன்னிலும், ஹெட்மெயர் ரன் ஏதும் சேர்க்காமலும் இருந்து அணியை 18.4 ஓவர்களில் 190 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

விக்கெட் சரிவு

முன்னதாக சிஎஸ்கே அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. டூப்பிளசிஸ் டக்அவுட்டில் ஆவேஷ்கான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கெய்க்வாட் 5 ரன்னில் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு மொயின்அலி, ரெய்னா ஜோடி ஓரளவு அணியை மீட்டனர்.

சிக்ஸர், பவுண்டரி அடித்த மொயின்அலி 36 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பதி ராயுடு , ரெய்னாவுக்கு ஒத்துழைத்தார். நீண்ட இடைவெளி்க்குப்பின் களமிறங்கிய ரெய்னா சுழற்பந்துவீச்சாளர்களை இலக்காக வைத்து ரன்களைச் சேர்த்தார்.

ரெய்னா 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராயுடு 23 ரன்னில் ரொம் கரன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். ரெய்னா 54 ரன்னில் ரன் அவுட் ஆக, அடுத்து வந்த தோனி டக்அவுட்டில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

123 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 7வது விக்கெட்டுக்கு சாம் கரன், ரவிந்திர ஜடேஜா ஜோடி அதிரடியாக ஆடினர். சாம்கரன் சிக்ஸர், பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்ததனர். ஜடேஜா 26 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது.

டெல்லி தரப்பில் ஆவேஷ்கான், வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

செப்டம்பரில் மீண்டும் ஐபிஎல்!

divya divya

ஹசரங்கவை தட்டித் தூக்கிய ஐபிஎல் அணி எது தெரியுமா?

divya divya

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் திகதியை அறிவித்தது ஐசிசி

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!