தூர் வாரும் சிவனடியார் தொண்டர்கள்
தேனி, கரூர், சேலம், கடலூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உத்ராட்ச மலை அணிந்த, நெற்றியில் விபூதி பூசியவாறு திரண்ட 300 – க்கும் மேற்பட்ட சிவனடியார் தொண்டர்கள் தெப்பக்குளத்தில் இறங்கி, தூர்வாரும் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.
குப்பைகள் சூழ்ந்து, தூர்ந்து கிடந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளத்தை சிவனடியார்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து, தூர்வாரி செப்பனிட்டிருக்கிறார்கள். இதனால், 40 ஆண்டுகளாக நடைபெறாமல் தடைப்பட்டிருந்த தெப்பத் திருவிழாவை இந்த வருடம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் பழைமை வாய்ந்த ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் உள்ளது. கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த வல்வில் ஓரி மன்னன், இந்த ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பி, வழிபாடு நடத்தியதாக வரலாறு உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலமும், இதனை ஒட்டிய தெப்பக்குளமும் கோயிலின் அருகில் உள்ளன.
40 வருடங்களுக்கு முன்புவரை, ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் கோயிலின் தேர்திருவிழாவின் போது, தெப்பத்திருவிழா, பிரமோற்சவம் தீர்த்தவாரி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு, சுவாமி குளத்தில் நீராடி அழைத்துச் செல்வது வழக்கமாக நடைபெற்றிருக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டு வந்த இதுபோன்ற திருவிழாக்கள், ராசிபுரத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக குளத்தில் நீர் வறண்டு போனதால், தெப்ப உற்சவம் போன்ற நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. இதனால், இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்து வந்தது. இதனால், வறட்சி காரணமாக நீர் நிரம்ப வழியில்லாமல் போன இந்த தெப்பக் குளம், நாளடைவில் குப்பைகள் கொட்டும் இடமாக மாறிப்போனது. இங்கே தெப்பக் குளம் இருப்பது கூட பலருக்குத் தெரியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை தொண்டர்கள் சார்பில், சீரமைக்கப்பட்டு மீண்டும் சித்திரை தேர் திருவிழாவின் போது தெப்ப உற்சவம் போன்ற நிகழ்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, திருத்தொண்டர் சபை நிறுவனர் ஆர்.ராதாகிருஷ்ணன், கரூர் சரவணன் ஆகியோர் இதனை பார்வையிட்டு சீரமைக்க முடிவு செய்தனர்.
தேனி, கரூர், சேலம், கடலூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உத்ராட்ச மலை அணிந்த, நெற்றியில் விபூதி பூசியவாறு திரண்ட 300-க்கும் மேற்பட்ட சிவனடியார் தொண்டர்கள் தெப்பக்குளத்தில் இறங்கி, தூர்வாரும் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். மீண்டும் குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்பி, சித்திரை மாதங்களில் நடைபெறும் தெப்ப உற்சவம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தவிருப்பதாக இப்பணியில் ஈடுபட்டுள்ள சிவனடியார் தொண்டர்கள் தெரிவித்தனர். இதனால், 40 வருடங்கள் கழித்து, தெப்பக் குளத்தில் தெப்பத் தேர்திருவிழாவைக் காணும் ஆவல் கலந்த மகிழ்ச்சியில் மக்கள் இருக்கிறார்கள்.