ஐ.நா தீர்மானங்களில் சர்வதேச விசாரணை உள்ளதென நாம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லை. அதில் நாம் ஏமாற்றப்பட்டு, இலங்கை அரசுகளே வெற்றியடைகின்றன. கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலர் மனதிற்குள் பொருமிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் மங்கள சமரவீர ஒரு கருத்தை கூறியிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை தாம் கொண்டு வந்தது, ஐ.நா பிரேரணையிலிருந்து தப்பிக்கவே என. இதில் தாம் வெற்றியடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
அரசு வெற்றியடைந்தால் தமிழர்கள் தோல்வியடைந்தார்கள் என்பதுதானே பொருள்.
2015 தீர்மானத்தில் சர்வதேச விசாரணை உள்ளது, சர்வதேச விசாரணை நடக்கப் போகிறது என நாம் சொன்னோம். ஆனால், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
தற்போதைய தீர்மானத்தின் அடிப்படையில் தகவல்களை சேகரிக்க ஒரு தொகை பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் குறுகிய காலத்திற்கே போதுமானது. இந்த தகவல்கள் எப்படி சேகரிக்கப்பட போகிறது, அது எவ்வளவு நம்பகரமானது என்ற கேள்வியும், சந்தேகமும் எம்மிடமுள்ளது.
2015 இல் இந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணை உள்ளதென நாம் அடித்து சொன்னோம். ஆனால் ஒரு சாண் கூட நகரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் இழுத்து மூடப்படுகிறது.
இலங்கையில் இன்னொரு ஆட்சி மாற்றம் வரும். அப்போது சர்வதேச நாடுகள் இன்னொரு தீர்மானத்தை கொண்டு வரும். அதை ஏற்றுக்கொள்வதாக ஆட்சிக்கு வருபவர் சொல்வார். அந்த தீர்மானத்திற்குள் சர்வதேச விசாரணை உள்ளதாக நாம் சொல்வோம்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்பவற்றில் உண்மையுண்டு. இந்த தீர்மானத்தில் நம்பிக்கையீனமுண்டு. இந்த தீர்மானங்களின் மூலம் நாம் ஏமாற்றப்படுகிறோம்.
ஜெனீவா விடயம் கூட்டமைப்பிற்குள் சரியாக ஆராயப்படவில்லை. ஜெனீவாவிற்கு ஒரு கடிதத்தை 3 தமிழ் கட்சிகள் கடிதம் அனுப்பினார்கள். அது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கே தெரியாது. அந்த கடிதம் அனுப்பிய பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரிய வந்தது. இது மிக ஆபத்தான விடயம்.
சர்வதேச விசாரணை நடந்து விட்டதென கூறுகிறார்கள். அது எப்பொழுது நடந்தது, யார் நடத்தியது என்பதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அறியவில்லை.
இது ஒருவர் அல்லது இருவர் கையாளளும் விடயமல்ல என்பதை சம்பந்தன் ஐயா புரிந்து கொள்ள வேண்டும். அவர் நன்றாக பேசினார் என்று கூறுகிறோம். ஆனால், இந்த விடயங்கள் பலரால் கையாளப்பட வேண்டிய விடயம். நாம் கூடியிருந்து கதைக்க வேண்டும். அதை வழிநடத்த வேண்டியவர் தலைவர். ஆனால் அவருக்கு முதுமையினால் இயலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலர் மனதிற்குள் பொருமிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் சொல்ல முடியாமல் இருக்கிறார்கள் என்றார்.