அரக்கோணம் அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்வரை கொலையானவர்களின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோதத் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில், அர்ஜூனனுக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியுள்ளன. அவர்களின் நண்பர்கள் மதன், வல்லரசு, சவுந்தர்ராஜ் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருமாள்ராஜபேட்டை இளைஞர்கள் சராமரியாகத் தாக்கியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அஜித், மதன் ஆகிய இருவர் நேற்று கைதான நிலையில், தற்போது புலி என்ற சவுந்தர், நந்தகுமார், கார்த்தி, சத்யா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்வரை கொலையானவர்களின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரின் உடல்களும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாவட்டக் காவல் காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், “இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வன்கொடுமைச் சட்ட விதிகளின்படி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.