தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் 4 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதி தொடர்பாக நீண்டகாலமாக சர்ச்சை நிலவி வருகிறது.
தென்னிந்திய திருச்சபையில் இருந்து பிரிந்த அமெரிக்கன் மிசன் தேவாலயத்தை சேர்ந்தவர்கள், யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதியை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
தென்னிந்திய திருச்சபையின் கீழிருந்த யூனியன் கல்லூரி அதிபர் விடுதி1946 ஆம் ஆண்டு வர்த்தமானியிடப்பட்டு பாடசாலைக்குரியதாக அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த காணியை தென்னிந்திய திருச்சபையும் கையகப்படுத்த முயலவில்லை.
எனினும், தென்னிந்திய திருச்சபையிலிருந்து பிரிந்த சேர்ந்த அமெரிக்கன் மிசன் தேவாலயத்தை சேர்ந்தவர்கள், அதனை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பில் நீண்ட சர்ச்சையின் பின்னர் வடக்கு கல்வியமைச்சு, பிரதேச செயலகம் என்பன, அந்த காணி உரித்து பாடசாலைக்கு உடையதென அண்மையில் அறிவித்து, பாடசாலை பயன்படுத்தலாமென அறிவித்தனர்.
எனினும், அங்குள்ள கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது என தேவாலயத்தை சேர்ந்தவர்கள், தொல்லியல் திணைக்களத்திற்கு அறிவித்து, அந்த கட்டிடம் பாதுகாப்பான கட்டிடம் என்ற அறிவித்தலை ஒட்ட நடவடிக்கையெடுத்தனர்.
இந்த நிலையில், அந்த வளாகத்தில் இன்று மாணவர்கள் சைக்கிள்களை நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த 4 மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.