தனது வாக்கினைப் பதிவு செய்வதற்காக சைக்களில் வந்தார் நடிகர் விஜய்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
திரையுலகப் பிரபலங்களில் ரஜினி, கமல், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் காலை 7 மணிக்கு எல்லாம் தங்களுடைய வாக்கினை பதிவு செய்துவிட்டார்கள். இதில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக காலை 6:30 மணிக்கு எல்லாம் அஜித் வாக்குச்சாவடி வந்து காத்திருந்து முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
காலை 9 மணியளவில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் விஜய் வாக்களிப்பார் என்று தகவல் வெளியானது. பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் பலரும் வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டார் விஜய்.
இதைச் சற்று எதிர்பாராத ரசிகர்கள், அவருடைய சைக்கிள் பயணத்தை பைக்கில் பின் தொடர்ந்தார்கள். சில காவல்துறையினரும் விஜய்யின் பாதுகாப்புக்கு உடன் வந்தார்கள். ஒரு கட்டத்தில் சைக்கிள் பயணத்தை பின் தொடர்பவர்களின் கூட்டம் அதிகரிக்கவே, வேகமாக சைக்கிளை ஓட்டினார் விஜய்.
பின்பு நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் விஜய். அவர் சைக்கிளில் வந்ததால் அங்கு ரசிகர் கூட்டம் அதிகமாகக் கூடியது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை பத்திரமாக வழியனுப்பி வைத்தனர். வீட்டுக்கு திரும்பும் போது தனது கார் ஓட்டுநருடன் பைக்கில் சென்றார். அப்போதும் ரசிகர்களும் அவரை பின் தொடர்ந்து செல்ஃபி எடுக்க முயற்சித்தனர்.