பொலிஸ் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் தற்காப்பைப் பயன்படுத்துவது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண விளக்கமளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் திரிவுபடுத்தப்பட்டு, பொலிசாரின் தாக்குதலில் இருந்து தப்ப திருப்பி தாக்கலாமென்ற பொருள்பட சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் போலித்தகவல் பரவியது.
தனது அறிக்கையை தவறாகப் புரிந்துகொண்டு சமூக ஊடகங்களில் செய்தி பரவியதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகளைத் யாரேனும் கடமை செய்ய விடாமல் தடுக்கவோ தாக்கவோ முடியாது என்று தெளிவுபடுத்தினார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்த தனது அறிக்கை, பொதுமக்களுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சட்ட விதிகளை மட்டுமே தெளிவுபடுத்தியது என்றும், இதன் பொருள் என்னவென்றால், அரச உத்தியோகத்தர் தனது கடமையைச் செய்வதற்கு எதிராக பொதுமக்கள் சக்தியைப் பயன்படுத்த முடியும் என்பதல்ல என்றார்.