ஜப்பானின் ஒசாகாவின் மேற்கு பகுதியில் கொரோனா தொற்று நான்காவது முறையாக அதிகரித்து வருகிறது.
அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு நேற்று அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது. வேலை நேரம் குறைக்கப்படுவதோடு பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நகரத்தில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் விளையாட்டு தொடக்கவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்படும் என்று ஒசாகா ஆளுநர் ஹிரோஃபுமி யோஷிமுரா நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் ஒசாகா மட்டுமின்றி அதைச்சுற்றியுள்ள ஹியோகோ, மியாகி ஆகிய பகுதிகளிலும் அமுலாகும்..
இந்தக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் மே 5ஆம் திகதி வரை ஒரு மாதத்திற்கு நடப்பில் இருக்கும் என்று பொருளியல் துறைக்கான அமைச்சர் யசுடோஷிகா நிஷிமுரா தெரிவித்தார். இவர் கொவிட்-19 கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராகவும் செயற்படுகிறார்.
கடந்த சில நாட்களாக ஒசாகா நகரில் வைரஸ் தொற்று மிக அதிகரித்துள்ளது. அந்த நகரை விடவும் பெரிய நகரமான டோக்கியோவை விடவும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒசாகா வட்டாரத்தில் நேற்று முன்தினம் மட்டும் 599 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில்தான் ஜப்பானில் அதிகமாக 654 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அப்போது நாட்டின் பல பகுதிகளில் பிரதமர் சுகா அவசரகால அறிவிப்பை விடுத்தார்.
ஒசாகாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கட்டுப்பாட்டை மீறும் நிறுவனங்களுக்கு 200,000 யென் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன் பொதுமக்கள் கேளிக்கை நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒசாகாவில் இரவு கேளிக்கை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் இளையவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக சட்டமன்ற தலைமைச் செயலாளர் கட்சுனோபு கட்டோ நேற்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இளையர்கள் அனைவரும் 20ல் இருந்து 30 வயதில் உள்ளவர்கள் என்று அவர் கூறினார்.
உருமாறிய கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே பரவல் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் அச்சம் தெரிவித்தார்.