தனது காதலை ஏற்க மறுத்த ஆசிரியையை வாகனத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்த சந்தேக நபர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கெப்பிட்டிக்கொலாவ மாவட்ட நீதிவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அவரை முற்படுத்திய போது, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பதவியா போலீஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதவான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர், சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செயற்பட்டால் வழங்கப்பட்ட பிணையை இடைநிறுத்தி விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதிவான் எச்சரித்தார்.
கப் வாகனமொன்றை நாளாந்த சம்பளத்திற்கு செலுத்தும் அவர், ஆசிரியை ஒருவரை ஒரு தலையாக காதலித்துள்ளார். பாடசாலையிலிருந்து ஆசிரியை வீடு திரும்பும் போதெல்லாம் அவரை வழிமறிக்கும் சாரதி, தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்துள்ளார்.
எனினும், ஆசிரியை காதலை ஏற்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த அந்த கலாப காதலன், அவரை பின்தொடர்ந்து சென்று மிரட்டியுள்ளார். இறுதியில் கப் வாகனத்தால், மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியை மோதி கொலை செய்ய முயற்சித்தார். இதில் ஆசிரியை பலத்த காயமடைந்தார்.
சில மாதங்களின் முன் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாரதி பல மாதங்களாக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.