தருமபுரி மாவட்டம் அரூர் திருவிக நகரில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் காவல்த்துறையினர் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
ஆசிரியர் குமார் என்பவரின் வீட்டிலிருந்து மஞ்சள் பையில் கட்டி வீசப்பட்ட ரூ.16.50 லட்சம் பணத்தை எடுத்து சென்ற அதிமுகவை சேர்ந்த நேதாஜி என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அதிமுகவை சேர்ந்த சரவணன், என்பவர் தன்னை வரவழைத்ததின் பேரில் ஆசிரியர் குமார் வீட்டிற்கு சென்றதாகவும், அந்த வீட்டில் இருந்து வீசப்பட்ட பணத்தை எடுத்துச் செல்லும் போது தேர்தல் பறக்கும் படையினரால் பிடிபட்டதாகவும் வருவாய் கோட்டாட்சியர் முத்தையனிடம் நேதாஜி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆசிரியர் குமார் என்வருடைய வீட்டினுள் பணம் இருக்கலாம் என்று அவருடைய வீட்டை சுற்றி வளைத்து டிஎஸ்பி தமிழ்மணி தலைமையிலான காவல் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் வருமானவரித்துறை சேர்ந்த அலுவலர்கள் அங்கு சோதனையில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்று பணப்பட்டுவாடா செய்ய இப்பகுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என பொதுமக்கள் இடையே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.