31.3 C
Jaffna
March 28, 2024
இந்தியா முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து நிரந்தர பழிச்சொல்லுக்கு ஆளாகவேண்டாம்: மோடியை வலியுறுத்தும் ஸ்டாலின்!

இலங்கைத் தமிழர்களை அவமதித்து – அவர்களுக்கு அநீதி இழைத்து – இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்திட வேண்டாம் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில், கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் – அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனமும், உலகத் தமிழர்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குச் சென்று வந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் – இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் பற்றி விவாதித்ததாக, பத்திரிகைச் செய்திகளில் எதுவும் வெளிவரவில்லை. ஈழத் தமிழர்களின் நலன் மீதான ஆழ்ந்த அக்கறையுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கான எந்தவித அறிகுறியும் வெளியே வரவில்லை.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று மிகுந்த பதற்றத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது – இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளரை இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க மத்திய பாஜக அரசு அனுமதித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மேலும், முக்கியமான இந்தப் பிரச்சினையில் மத்திய பாஜக அரசு ஏனோ தானோ என்று அக்கறை காட்டாமல் இருப்பது, தமிழர்களை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையின்பாற்பட்டதாகும்.

இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை – உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள். ஐ.நா மனித உரிமை மன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளது என்பதைக் கூட மத்தியில் உள்ள பாஜக அரசு மறந்தது ஏன் என்ற கேள்வி இப்போது நியாயமாக எழுகிறது.

திமுக சார்பில், ஏற்கனவே பிரதமருக்குக் கட்சியின் மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பி, “ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுக, மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டிடுக!” என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினைக் கூட பிரதமர் நரேந்திர மோடி கேட்காமல் – போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிடுவது, தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது; மிகுந்த கண்டனத்திற்குரியது. இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் எரிமலையாய்க் குமுறுகிறது.

ஆகவே, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் நாளை (22) எடுத்துக் கொள்ளப்படுகின்ற தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது – அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிடும் வகையில் – உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டி – உரிய திருத்தங்களுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறிட பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களை அவமதித்து – அவர்களுக்கு அநீதி இழைத்து – இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம் என்றும் – தமிழ் நெஞ்சங்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாகிட வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment