நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், திருவொற்றியூர் தொகுதி வேட்பாளருமான சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது ஆண்டு வருமானம் 1,000 ரூபா என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து, திருத்தப்பட்ட பிரமாணப்பத்திரத்தை இன்று (18) தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் கடந்த 15ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், அவரது ஆண்டு வருமானம் 1,000 ரூபா என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக வலைத்தளங்களில் அதுதொடர்பான பதிவும் வைரலானது.
இந்நிலையில், சீமான் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது ஆண்டு வருமானம் தவறுதலாக இடம்பெற்றுள்ளது. அவர் வருமான வரித்துறைக்கு செலுத்திய தொகைதான் 1,000 ரூபா. அவரது ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபா. எனவே, மேற்கண்ட தவறைத் திருத்தி புதிய பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.