கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச மக்கள் இன்று (17) மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இன்று காலை வட்டக்கச்சி பிரதேசத்திலிருந்து உழவு இயந்திரங்களில்
கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு வந்த மக்கள், அங்கிருந்து ஏ9
வீதி ஊடாக மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரச அதிபர் மற்றும்
பொலீஸ் உயரதிகாரிகளுக்கான கோரிக்கை மனுக்களை கையளித்தனர்.
கடந்த 10 ஆம் திகதி வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற கத்தி குத்தில்
சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மரணமடைந்திருந்தார். மரணமடைந்த இரண்டு
குழந்தைகளின் தந்தையான 31 வயதுடைய அருளம்பலம் துஸ்யந்தன் கிராமத்தின்
நலன்களில் அக்கறையுள்ள நற்பிரஜை எனவும், சிறந்த விளையாட்டு வீரர்
எனவும் தெரிவிக்கும் பொது மக்கள், அவருடைய மரணம் கிராமத்தில்
இடம்பெறுகின்ற கஞ்சா, கசிப்பு, சட்டவிரோத மணல் கடத்தல் ஆகியவற்றின் விளைவே
எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலீஸார் உட்பட
சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் இதயசுத்தியுடன் முன்வரவேண்டும்
என்றும் தெரிவிக்கும் பொது மக்கள், கொலைக்குரிய நீதி பெற்றுத்தர
வேண்டும், காலம் தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி, நிம்மதியான
வாழ்வுக்கு வழி ஏற்படுத்து, எம் வாழ்வின் எதிர்காலம் என்ன? இலஞ்சம் அற்ற
நாடு வசந்தம் பூக்கும் வீடு, நிதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என
வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.