வடபிராந்திய இ.போ.சவின் முக்கிய அதிகாரிகள் பலர் சுயதனிமைப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் இ.போ.ச சாலைக்குள் கொரோனா தொற்று தீவிரமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காரைநகர் சாலையை சேர்ந்த 8 பேர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இ.போ.சவினர் சேவையில் ஈடுபடுவதை தவிர்த்து, தனியார்துறையுடன் இணைந்து சேவையில் ஈடுபட வேண்டுமென வடக்கு ஆளுனர் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இது தொடர்பில் இ.போ.சவின் வடக்கு சாலை தொழிற்சங்கங்கள், அதிகாரிகள் நேற்று சந்திப்பில் கலந்து கொண்டனர். சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் நேற்று மாலை வெளியான கொரோனா பரிசோதனை முடிவில், தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதையடுத்து, அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை சுயதனிமைப்பட அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், வடக்கு இ.போ.சவின் முக்கிய அதிகாரிகளும் தற்போது வீடுகளில் தனிமைப்பட்டுள்ளனர். அவர்களிற்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் கடமைகளை மேற்கொள்வர்.