கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி), முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் தவராஜா ஆகியோர் தமது பதவிகளை விலகியுள்ளனர்.
கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் பல சபைகளில் ஆட்சிக்காலத்தை பங்கிடுவதாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்குள் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.
வவுனியா தெற்கு தமிழ் பி்ரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ் தேசியகூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.
அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் பேசப்பட்டிருந்தது. தமிழ் அரசு கட்சியுடனும் சில சபைகள் பற்றி பேசப்பட்டிருந்தது.
எனினும், பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையையடுத்து அந்த மாற்றத்தை கட்சிகள் கைவிட்டிருந்தன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கரைத்துறைப்பற்று பிரரேசசபையில் தனக்கு தேர்தலில் பணியாற்றிய ஒருவரை தவிசாளராக்குவதில் வினோநோகராதலிங்கம் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறார். கரைத்துறைப்பற்று பிரதேசசபை புளொட் வசமிருந்தது.
பதிலாக, வவுனியாவில் புளொட்டிற்கு வழங்குவதாக வாக்களித்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தமது தவிசாளரை பதவிவிலக வைத்துள்ளனர்.
தனது ஆதரவாளரை தவிசாளராக்க வேண்டுமென வினோநோகராதலிங்கம் அடம்பிடிக்க, நீண்டநாள் இழுபறியின் பின்னர் இப்பொழுது இரு தரப்பும் தமது தவிசாளர் பதவிகளை துறந்துளள்ன.
அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தனது பதவியை துறந்ததுடன், அது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட கடிதம் இன்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டு பிரதேசசபையின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதசே சபையின் தவிசாளரும் தனது பதவியை துறக்கும் கடிதத்தை கட்சி தலைமையிடம் கொடுத்துள்ளார்.
நல்லூர் பிரதேசசபையிலும் இதேவிதமான சம்பவமே நடந்தது. கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமியின் தேர்தல் பணி செய்த நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் மதுசுதனை தவிசாளராக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று, இறுதியில் நல்லூர் பிரதேசசபையையே கூட்டமைப்பு கோட்டை விட்டது.
இப்பொழுது வவுனியா தெற்கு, முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபைகளிலும் கூட்டமைப்பு பெரும்பான்மை பலமில்லாத நிலையில், இந்த விசப்பரீட்சையில் இறங்கியுள்ளது. ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி செஞ்சோற்று கடன் தீர்க்க முயன்றதால் கூட்டமைப்பு நல்லூரை இழந்தது. வினோநோகராதலிங்கத்தின் செஞ்சோற்று கடன் கூட்டமைப்பின் இரண்டு சபைகளை இழக்க செய்யுமா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும்.