சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அவர்கள் சிறிய அறிகுறிகளைக் காட்டிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக சிரிய ஜனாதிபதி அலுவலகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
சிரிய ஜனாதிபதியின் மனைவி, 2019 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைவதாக அறிவிக்கப்பட்டது.
இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர், வீட்டில் தனிமையில் இருந்து தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து சிரியா நோய்த்தொற்றுகள் கடுமையாக அதிகரித்துள்ளன என்று நாட்டின் கொரோனா வைரஸ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கடந்த வாரம் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகம் ஒரு வாரத்திற்கு முன்பு முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது. என்றாலும் அங்கு கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருகிறது.
ஒரு தசாப்த கால கொடூர யுத்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மில்லியன் கணக்கானவர்கள் அகதியாகியிருந்தனர். ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டிலிருந்த நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யா மற்றும் ஈரானின் உதவியுடன் அசாத் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.