கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் மனைவி யஹாலி சங்கக்கார என்ற பெயரில் சிகிரியா பகுதியில் இரண்டு ஏக்கர் அரச காணியை மோசடி செய்தது தொடர்பில் தம்புள்ளை பிரதேச செயலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மத்திய மாகாண ஆளுனர், கிரிக்கெட் வீரர் ஒருவருடன் தொடர்புடைய காணி மோசடி பற்றி பகிரங்கப்படுத்தினார்.
தற்போது, அது பற்றிய மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
மில்லியன் கணக்கான பெறுமதியான கிட்டத்தட்ட 90 பேர்ச் காணிப்பாப ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில், மோசடியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டை, குறைந்த வருமானம் ஈட்டும் நபர் எனக் கூறி தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. மாத வருமானம் 7,000 ரூபாய்க்கும் குறைவானது என அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி ஆவண தயாரிப்பிற்கு உதவியாக கூறப்படும் கிராமசேவகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மைலாந்தேவ பகுதியில் வசிக்கும் அதுகல் பெடிகே பத்மினி என்பவரால் இந்த நிலம் படிவம் எண் AR / 5/031539 இன் படி, தம்புள்ளை பரணகமவில் வசிப்பதாகக் கூறப்படும் யஹாலி சங்கக்காரவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பத்மினி என்ற பெண், 2020 ஒக்டோபர் 05 அன்று தனது நிலத்தை பராமரிக்க முடியாததால் மற்றொரு குறைந்த வருமானம் கொண்ட யஹாலிக்கு ஒப்படைக்குமாறு தம்புள்ளை பிரதேச செயலாளரை கோரியிருந்தார்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்
சார்பாக அரசு நிலங்களை மாற்றும் திட்டத்தின் கீழ், இந்த நில உரிமை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
நிலம் கைமாற்றப்படும் யஹாலி சங்கக்கார குடும்பம் குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பம் என்பதை சம்மந்தப்பட்ட கிராமசேவகர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் ஆவணங்கள் மூலமாக பிரதேச செயலாளருக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆவணங்களை மேலோட்டமாக பார்வையிட்ட தம்புள்ளை பிரதேச செயலாளர் பியல் ஜெயசூரிய, 2020 டிசம்பர் 14 அன்று ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
ஆவணங்களின் படி, காணியை புதிதாக பெற்றுக்கொள்ளும் யஹாலியின் கணவர் சங்கக்கார ஒரு விவசாயியாவார். அவர்களின் மாத வருமானம் ரூ .7000 க்கும் குறைவாக உள்ளது.
பின்னர், பிரதேச செயலாளருக்கு தொலைபேசி வழியாக வழங்கப்பட்ட தகவலொன்றில், வர்த்தக நோக்கத்துடன் காணி உரிமை கைமாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டது. கைமாற்றப்பட்ட நிலத்தில் நட்சத்திர ஹொட்டலொன்று கட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பிரதேச செயலாளர் விசாரணையை நடத்திய போது, காணி மோசடி தகவல் வெளியானது.
யஹாலி அந்த பகுதியில் வசிப்பவர் என உறுதிசெய்து, 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி கிராம சேவகர் ஒரு சான்றிதழை வழங்கியிருந்தார். யஹாலி மற்றும் அவரது விவசாயி கணவருக்கு 18 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத குழந்தைகள் இல்லை, வேறு சார்புடையவர்கள் இல்லை என்று சான்றிதழ் கூறுகிறது.
இந்த நிலத்தின் உரிமையாளர் தம்புள்ளையில் வசிப்பவர் என்பதை நிரூபிக்க அதே முகவரியுடன் ஒரு தேசிய அடையாள அட்டையின் பிரதி தொடர்புடைய கோப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த முகவரியில் ஒரு பெண் அல்லது ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட பெயரைக் கொண்டிருப்பதாக பிரதேச செயலகத்திற்கு எந்த தகவலும் இல்லை என்றும், அத்தகைய தேசிய அடையாள அட்டை எதுவும் பிரதேச செயலகத்தால் வழங்கப்படவில்லை என்றும் சந்தேகத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே, இது தொடர்பாக கிராம சேவகரை சேவையிலிருந்து இடைநிறுத்த மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்தார்.
கீழ் அதிகாரிகள் கோப்பை தயாரித்து உறுதிப்படுத்தியதால் நிலங்களை மாற்றுவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டதாக தம்புள்ளை பிரதேச செயலாளர் பியல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
தனக்கு பணம் வழங்கப்பட்டதால் காணியை கைமாற்றும் ஆவணத்தை வழங்கியதாக காணி உரிமையாளரான பெண் தெரிவித்துள்ளார். எனினும், யாருக்கு காணி மாற்றப்பட்டது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
காணியை ஆய்வு செய்த பிற அதிகாரிகளும் அதனை உரிமையாளருக்கு தெரிவிக்கவில்லையென கூறப்படுகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட கிராமசேவகரின் பிள்ளை கண்டியிலுள்ள உயர்நிலை பாடசாலையொன்றில் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிள்ளை பாடசாலை அனுமதியை பெற, சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரரின் மனைவி உதவியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விசாரணைகள் தொடர்கிறது.