கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் (WCT) குறித்த முன்மொழிவுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற இலங்கை அரசாங்கத்தின் கூற்று ‘உண்மையில் தவறானது’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சு (MEA) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற இணையவளி ஊடக சந்திப்பில், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கை அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பில், அதானி துறைமுக நிறுவனத்திற்கும், விசேட பொருளாதார வலய நிறுவனத்திற்கும் முன்வைக்கப்பட்ட யோசனை, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் அனுமதிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை, இந்தியாவுடனும், ஜப்பானுடனும், இணைந்து அபிவிருத்தி செய்ய, அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“கொழும்பில் உள்ள எங்கள் உயர் ஸ்தானிகராலயத்தின் ஒப்புதல் தொடர்பான அவர்களின் ஊடக வெளியீடு உண்மையில் தவறானது என்று ம் இலங்கை அரசாங்கத்திற்கு கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கிறது,” என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.
“இந்த திட்டத்தில் இலங்கை அரசு முதலீட்டாளர்களுடன் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதன்போது, குறித்த திட்டம் தொடர்பில், இந்திய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதா?, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்றும் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் வினவியுள்ளார்.
அத்துடன், தொழிற்சங்க எதிர்ப்பு காரணமாக, அந்தத் திட்டத்தை இரத்துச் செய்யும் நிலைமையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா, அது இந்திய அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.